செய்திகள்

விமர்சனங்களுக்கு செயல்பாடு மூலம் பதில் அளிப்பேன்: அமைச்சராக பதவி ஏற்றபின் உதயநிதி பேட்டி

தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன்

சென்னை, டிச. 14–

இனி நடிக்க மாட்டேன்; விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கவர்னர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி ஏற்றவுடன் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தி.மு.க. இளைஞரணி செயலாளராகவும், எம்.எல்.ஏ.ஆகவும், பதவியேற்ற போது வாரிசு அரசியல் என விமர்சனம் வந்தது. விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியாது, செயல்பாடுகள் மூலமே பதிலளிக்க முடியும்.

விளையாட்டு தலைநகர்

குறைகள் இருந்தால் சொல்லுங்கள். அதனை சரி செய்வோம். துறை செயலாளர் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்புடன் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை முடிந்தளவு சிறப்பாக செயல்படுவேன். தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற முயற்சிப்பேன்.

தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளையும் செய்ய வேண்டும். முதல்கட்டமாக இந்தப் பணிகளில் எனது கவனம் இருக்கும்.

இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகுகிறேன். இயக்குநர் மாரி செல்வராஜின் ‘‘மாமன்னன்” திரைப்படமே எனது கடைசிப் படமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொறுப்பாக உணர்ந்து

பணியாற்றுவேன்

பதவி ஏற்பதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:– எப்போதும் வழிநடத்தும் முதலமைச்சரிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *