சிறுகதை

விபரீத விருப்பம் – ராஜா செல்லமுத்து

அவ்வளவாக கூட்டமில்லாத ஒரு நகரப் பேருந்தில் ஆங்காங்கே சில பெண்களும் ஆண்களும் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

அது ஒரு மெல்லிய மழை பெய்யும் மாதம். சன்னலைத் தொட்டுத் தொட்டு ஈரம் அப்பிச்சென்றது.

சிலர் ஜன்னலை அடைத்தார்கள். சிலர் அடைக்காமல் இருந்தார்கள். மென்மையான தூறல் மேனிக்கு மிக்க நல்லதென்று சிலர் நனைந்து கொண்டே வந்தார்கள் .

சில ஆண்களும் பெண்களும் இருக்கையில் அமர்ந்து கொண்டு சின்னச் சின்ன சில்மிஷங்களில் ஈடுபட்டார்கள் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த சுயம்பு இதைக் கவனித்து விட்டான்.. அவனுக்கு அவன் மட்டும் தனியாக பயணம் செய்ததால் அவன் அருகில் இருந்த இருக்கை காலியாக இருந்தது.

ஜோடிகள் நிறைய அத்துமீறாமல் குறைவான கொஞ்சலில் இருந்தார்கள் .

சுயம்புக்கு சுர் என்றது.

என்ன இது? பப்ளிக் பிளேஸ் எப்படி பிஹேவ் பண்ணனும்னு தெரியல. இவங்க எல்லாம் எப்படி மத்தவங்களுக்கு வழிகாட்டியா இருப்பாங்க என்று வருத்தப்பட்டான் சுயம்பு.

ஆனால் அவன் அமர்ந்த இருக்கையில் இருந்து இடது புறம் இருந்த முன் இருக்கையில் ஒரு ஜோடி நிறையவே சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

அவர்கள் பேசுவது. சிரிப்பது தொட்டுத் தொட்டுத் தட்டுவது என்று அவர்களின் சேட்டை கொஞ்சம் எல்லை மீறியது.

இதைப் பார்த்த சுயம்புக்கு கொஞ்சம் கோபம் உண்டானது. கேட்டு விடலாமா? என்று கூட அவனது கோபம் கொந்தளித்தது.

எங்கள் சௌகரியம்; உனக்கு என்ன வருத்தம்? என்று யாராவது எதிர் கேள்வி கேட்டு விட்டால் எங்கே போய் முட்டிக் கொள்வது என்ற வருத்தத்தை எச்சிலில் கரைத்து விழுங்கிக் கொண்டான் சுயம்பு.

ஆனால் ,அந்த ஜோடி செய்யும் சேட்டைகள் அந்த பேருந்தையே நிறைத்தது. யாரும் தட்டிக் கேட்காமல் தங்கள் வேலையைக் கவனித்துக் கொண்டு வந்தார்கள்.

‘ நமக்கு மட்டும்தான் இந்த கோபம் இருக்கிறதா ? ஏன் இவர்கள் அமைதியாக பயணம் செய்யக் கூடாதா? என்று சுயம்பு கொஞ்சம் வருத்தப்பட்டது உண்மைதான்.

அவன் இறங்கவேண்டிய நிறுத்தத்திற்கு முன்னதாகவே எழுந்து போய் அவர்களை திட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த அளப்பறை செய்த மூஞ்சி எவை என்று பார்த்து விட வேண்டும் என்று அவன் இருக்கையில் இருந்து எழுந்து அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் அந்த நபர்கள் அருகே சென்றான் சுயம்பு

அங்கே அவன் கண்ட காட்சி கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது .

அந்த இருக்கையில் ஆணுடன் அமர்ந்திருந்தது பெண் அல்ல ஒரு திருநங்கை என்பது தெரிந்து கொண்டான் .

அந்தக் காட்சியை பார்த்ததும் அவனுக்கு இருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

அவன் அருகில் நின்று கொண்டிருந்த இன்னொருவர் சுயம்பு இடம் பேசினார்.

உங்களுக்கு இவங்கள பார்த்ததும் கோபம் வந்தது எனக்கு தெரியும். எனக்கு அதைவிட கோபம் வந்தது.

ஆனா ஒரு வருத்தம் என்னன்னா ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாம வாழுற அந்த வாழ்க்கை ரொம்ப கொடுமையானது சார். அவங்களும் தன்ன பொண்ணா நினைச்சுக்கிறாங்க.

ஆனா எல்லாரும் திருநங்கைகளை ஒரு போகப் பொருளாத்தான் பாக்கிறாங்க. அவர்களுக்கு காதல் மனசு இருக்கு சார்.

பஸ்ல , பீச்ல , காலேஜ்ல , ஆபீஸ்ல இருந்து அவங்க காதல் ஜோடியோட போறவங்கள பார்க்கும் போது அவங்களுக்கு ஒரு உள்ளுக்குள்ள வருத்தம் இருக்கும்.

இங்க பாருங்க இந்த பஸ்ல கூட நிறைய பேரு ஜோடி ஜோடியாக உட்கார்ந்துட்டு பேசிட்டு சிரிச்சிட்டு வராங்க

ஆனா இவங்க கூட யாரு சார் பேசுவா. யாரு கம்பெனி குடுப்பா. இவங்க சந்தோஷத்த யார் பகிர்ந்து கொள்வார்ள்.

அதனாலதான் என் பிரண்டு தான் அந்த திருநங்கைகூட உட்கார்ந்து இருக்கான். அவங்க யாருன்னு கூட தெரியாது.

ஆனா அவங்க ஒரு ஆணோட பேசுறோம் அப்படிங்கிற திருப்தி அவங்களுக்கு இருக்கும்.

இது, அவங்களுக்கு அது கோடி சந்தோஷத்தை கொடுக்கும் சார்

போனவாரம் கூட நான் ஒரு திருநங்கை கூட ஒக்காந்து பேசிட்டு தான் வந்தேன்.

அவங்களுடைய மனசு ரொம்ப மென்மையானது. அப்படி பேசும் போது அவங்களுக்கு இருக்கக்கூடிய ஆனந்தம் ரொம்ப பெருசு சார்.

வருத்தப்படாதீங்க. கொஞ்சம் பொறுத்துக்கோங்க .மனுசனுக்கு கோவம் வருவது சகஜம்.

இவங்க மேல கோபப்பட வேண்டாம். திருநங்கைகள் பாவப்பட்ட ஜென்மங்கள் என்று அவன் சொல்லி முடித்த போது அந்தத் திருநங்கை மீது சுயம்புக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது.

அவன் இறங்க வேண்டிய இடம் வந்தது; இறங்கினான்.

ஒரு வாரம் கழித்து அதே பேருந்தில் அவன் பயணப்பட்டான். அவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஒரு திருங்கை அமர்ந்தாள்.

சுயம்பு அந்த திருநங்கையுடன் வாய்விட்டுப் பேசிக் கொண்டுவந்தான்.

மற்றவர்களை பற்றி அவனுக்கு இப்போது கவலை இல்லை; அந்தத் திருநங்கையின் சந்தோசம் மகிழ்ச்சி தான் முக்கியம்.

மற்றவர்கள் நம்மை எப்படி நினைத்தால் என்ன ? என்று நினைத்துக் கொண்டான் சுயம்பு.

அவன் அலுவலகம் இறங்குவது வரைக்கும் அந்த திருநங்கையுடன் பேசி சிரித்து மகிழ்ந்து கொண்டே வந்தான் .

அது அவனுக்கான சந்தோஷம் அல்ல. திருநங்கைக்கான திருப்தி மகிழ்ச்சி என்பதை உணர்ந்து கொண்டான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *