சிறுகதை

விபரம் தெரிந்து பேசு |ராஜா செல்லமுத்து

நீண்ட நாட்களான வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சிவாவின் குடும்பம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

சிவாவும் சந்திரனும் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்கள். மொத்த குடும்பமும் ஒரு காரில் வந்து கொண்டு இருந்தார்கள்

நல்ல நேரம் முடிவதற்குள் சாமியை தரிசனம் செய்து விட வேண்டும். பொங்கல் வைத்து விட வேண்டும் என்ற முனைப்பில் காலையில் அவசரம் அவசரமாக எல்லோரையும் கிளப்பிக் கொண்டிருந்தான் சிவா.

வாடகை காரை அமர்த்தி, அவன் தூரம் உள்ள கோயிலின் விலாசத்தை டிரைவரிடம் கேட்டான்

டிரைவர் தனக்கு வழி தெரியாது என்று உதட்டைப் பிதுக்கினார்.

நீங்க இந்த ஊருதான என்று டிரைவரிடம் சிவா கேட்க….

ஆமா சார்… இந்த ஊரு தான் என்றான் டிரைவர்.

அப்புறம் எப்படி? இவ்ளோ பெரியகோயில் உங்களுக்கு தெரியாம போச்சு என்றான்.

இல்ல சார் நான் அந்த வழி, ஒரு முறை கூட போனதில்லை என்று டிரைவர் சொன்னான்.

அப்படின்னா எங்களோட டூவீலர நீங்க ஃபாலோ பண்ணுங்க என்று சொல்லியபடியே சிவாவும் சந்திரனும் முன்னால் டூவீலரில் சென்றனர்.

டூவீலர் ஓட்டிக்கொண்டு போனார்கள். டூவீலரை கார் ஃபாலோ செய்தது

டூவீலரில் செல்லும் சிவாவுக்கும் சந்திரனுக்கும் கூட அந்த கோயிலின் ரூட் தெரியாது அவர்களும் கேட்டு கேட்டு கொண்டே சென்றார்கள்

அதோடு இல்லாமல் கார் வருவதையும் நின்று கவனித்து விட்டு போவார்கள். நேரம் கரைய கரைய சிவாவுக்கு நல்ல நேரத்திற்குள் கோவிலுக்குள் காலடி வைத்து விட வேண்டும் என்ற உணர்வு மேலிட்டது.

அதற்கு தகுந்தார் போல் டூவீலரை தொடர்ந்து கார் வந்து கொண்டிருந்தது

ஒரு திருப்பத்தில் கார் வராமல் இருந்தது .

டூவீலரை நிறுத்திய சிவா காரை காணவில்லை என்று திரும்பிப் பார்த்தான்.சந்திரனிடம் விஷயத்தை கேட்டான்.

கார காணாமே என்று சிவா சொல்ல

ஆமா என்று சந்திரனும் பதில் சொன்னார்.

டூவீலரை இருவரும் திருப்பினார்கள். 5,6 வளைவுகள் திரும்பிப்போயும் கூட காரைக் காணவில்லை …நல்ல நேரம் முடிய போகுது எங்க போனான், இந்த கார்க்காரன் என்று சிவா சத்தம் போட்டுக் கொண்டே செல்ல

ஒரு திருப்பத்தில் கார் நின்று கொண்டிருந்தது. காரில் இருந்த ராமன் டிரைவர் சீட்டுக்கு அடியில் ஏதோ தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்தார்

நடந்தது என்ன? என்று தெரியாமலே சிவா சண்டை போட்டான்.

என்ன ஆச்சு? ஏன் இப்படி நிக்கிறீங்க? நல்ல நேரம் முடிய போகுது சீக்கிரம் வாங்க என்று அதட்ட காரில் இருந்தவர்கள் அத்தனை பேரும் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

சிவா போட்ட சத்தத்தைபார்த்து பயந்த டிரைவர் உடனடியாக காரை இயக்கினார்.

காரில் இருந்த அத்தனை பேர்களும் ஒரு மாதிரியாக விழித்தார்கள்.

சிவாவுக்கு அது என்னவோ போல் ஆனது ?

எதுக்காக காரணம் இல்லாம எல்லாரும் விழிக்கிறாங்க என்று அவன் மனதுக்குள் அடித்துக்கொண்டது.

கோவிலுக்கு போய்விட்டு திரும்பியதும், காரில் இருந்த சிவாவின் தங்கை வாய் திறந்தாள்.

அண்ணா நீ டிரைவர ஏன் திட்டுனா? அங்க என்ன நடந்தது தெரியுமா ?என்று சொல்ல

என்ன நடந்தது ?என்று ஆவலாக கேட்டான் சிவா.

நீங்க முன்னாடி போயிட்டீங்க .வேகமாக வந்த ஒரு வண்டிக்காரன், கார் கண்ணாடியை உடைத்து விட்டான் . அது நல்ல இடத்துக்கு போகும்போது தப்பா இருக்கும் அப்படின்னு தான் உன் கிட்ட சொல்லல, எப்பவுமே ஒரு விஷயத்தை பேசும் போது என்ன நடந்தது அப்படிங்கறது கேட்டு பார்த்துட்டு யோசிச்சு பதில் பேசு..

நாங்க நல்ல காரியத்துக்கு கோயிலுக்கு போகும்போது அத உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைத்தோம். அதுதான் நடந்தது . யாரும் சும்மா நிக்க மாட்டாங்க என்று சொல்ல ….

இனிமேல் எதையும் என்ன நடந்துச்சுன்னு பார்த்து கேட்டு விட்டு பேசு என்று தங்கை சொன்னாள்.

சிவாவின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தது போலிருந்தது…

இனிமேல் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அதை பார்க்காமல் கேட்காமல் ஆராய்ச்சி செய்யாமல் பேசக்கூடாது என்ற ஒரு முடிவுக்கு வந்தான் சிவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *