செய்திகள்

விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலையில் 103 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள்: விழுப்புரம் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்

Spread the love

விழுப்புரம், ஜூன்.11–

விழுப்புரம் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலையில் 103 இடங்களில் ஒளிரும் மின்விளக்கு பொருத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகள் குறித்தும், அந்த விபத்துகள் என்னென்ன காரணங்களால் ஏற்பட்டது என்பது குறித்தும், நடப்பு ஆண்டில் விபத்துகளை குறைக்க எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 5 மாதங்களில் 15 சதவீத விபத்துகள் குறைந்துள்ளது.அதுபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு 30 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டும், பேரிகார்டு அமைத்தும் விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் 40 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது. மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களான 103 இடங்களில் ரூ.57 லட்சத்தில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு கருத்துரு தயாரிக்கப்பட்டு கலெக்டர் மூலமாக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்ததும் உடனடியாக ஒளிரும் மின்விளக்குகள் பொருத்தப்படும். அதுபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் கார்களில் செல்பவர்கள் வேகத்தை குறைத்து இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருமால், நீதிராஜன், கனகேஸ்வரி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, முதுநிலை தொழில் அலுவலர் கணேசன், உதவி கோட்ட பொறியாளர் லெனின், மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *