ஆர்.முத்துக்குமார்
சமீபமாக சாலை விதிமீறல்கள் சென்னையில் விசேஷ கவனம் செலுத்தப்படுவதை பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் மாத இறுதியில் மிக பரபரப்பாக இயங்கி வந்த போக்குவரத்துக் காவலர்கள் கடந்த சில மாதங்களாக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியைத் தீவிரமாகவே செய்து வருகிறார்கள்.
இந்த விசேஷ முயற்சியால் குடிபோதையில் சாலை விபத்துக்கள் நடப்பது குறையத் துவங்கி விடும். இது காப்பீடு நிறுவனங்களுக்கு நல்ல செய்தியாகும்.
வாங்கும் பிரிமியத் தொகைக்கு செலவின்றி இருப்பது தானே அவர்களுக்கும் லாபம்! அந்த லாபத்தை மேலும் அதிகரிக்க அவர்களே சாலை விதி மீறல்களை தடுக்கும் முதலீடுகளுக்கு செலவு செய்வது அவர்களுக்கும் நல்லது தான்!
இந்நிலையில் விபத்துப் பகுதிகளில் சாமானியன் பிறருக்கு உதவினால் அவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 ஆயிரம் தந்து கவுரவிப்பதாக அறிவித்து இருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய நல்ல முடிவாகும்.
சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகையுடன், மாநில அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்துறைச் செயலர் பி.அமுதா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், “சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கெனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம் தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து கூடுதலாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
இதைப் பெறுவதற்கு சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக (கோல்டன் ஹவர்) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உயிரைக்காப்பாற்றியிருக்க வேண்டும். அவர்கள் குறித்த விவரங்களை, காவல் நிலையம் அல்லது மருத்துவமனையிடம் பெற்று மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வர்.
அதில் வெகுமதி பெறத் தகுதியானவர்கள் குறித்த பரிந்துரையை மாதந்தோறும் போக்குவரத்து ஆணையரகத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைக்கும். இவ்வாறு தேர்வு செய்யப்படுவோரது வங்கிக் கணக்கில் ஆணையரகம் வாயிலாக ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்படும்.
வெகுமதியைப் பெறுவதற்கு சில வழிகாட்டுதல்களையும் போக்குவரத்து ஆணையர் வழங்கியுள்ளார். அதன்படி, உயிர்களைக் காப்பாற்றுவோருக்கு விபத்து எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
ஒரே விபத்தில் பலரின் உயிரை, பலர் காப்பாற்றியிருந்தால் அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். ரொக்கப் பரிசுடன், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் தொகையுடன், மாநில சாலைப் பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் வழங்க போக்குவரத்து ஆணையருக்கு அனுமதி அளிக்கிறது. இந்த திட்டம் 2026–-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆக பிறரை காப்பாற்ற எண்ணும் பல நல் ஆர்வலர்கள் உருவாக இப்படி ரூ.10 ஆயிரம் வெகுமதி என்பது ஊக்கம் தரும். அது மட்டுமின்றி அப்படி ஏதும் தொகையோ, அவரின் அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கும் அவரது சேவைகள் ரகசியமாகவே இருக்கவும் இந்தத் திட்ட வரைவில் உறுதி தந்தும் உள்ளது.