சிறுகதை

வினைச் செயல் ..! …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

” இத நா ஒத்துக்குற முடியாது. நூறு ரூபாய்க்கு நீங்க இதைக் கொடுக்கிறத எப்படி நான் ஏத்துக்கிருவேன். முடியவே முடியாது” என்று ராஜீவ் கொடுத்ததை ஏற்றுக்கொள்ள மறுத்தார் கடைக்காரர் தர்மராஜ். சுற்றியிருந்த சில பேரில் ராஜீவுக்கு ஆதரவாகவும் தர்மராஜுக்கு எதிராகவும் பேசினார்கள். ராஜீவ் செஞ்சது தப்பு இல்ல. தர்மராஜ் செஞ்சது தான் தப்பு ” என்று சிலர் சொன்னார்கள்.

” நீங்க தானே கொடுத்தீங்க? அது தப்பு இல்லையே. இப்ப வாங்குறதுக்கு என்ன கசக்குது?” என்று தர்மராஜை சிலர் திட்டினார்கள்.

“அது சரிதாங்க அதுக்காக இப்படியா? என்று தர்மராஜ் எகிறினார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னும் சில பேர் தர்மராஜ் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு ராஜீவ் செய்ததையே செய்தார்கள்.

” என்ன பாத்தா என்ன இளிச்சவாயன் மாதிரி தெரியுதா? இப்படிக் கூடி வந்திருக்கிறீங்க. முடியாது .நான் இதை ஒத்துக்கவே முடியாது” என்று அடித்து சொல்லிக் கொண்டிருந்தார் தர்மராஜ் .

” எங்களுக்கு நீங்க கொடுத்தது தானே இது? நீங்க கொடுக்கும் போது நாங்க வாங்கிக்கிரணும். நாங்க கொடுக்கும் போது நீங்க வாங்க மாட்டீங்களா ? இது என்ன நியாயம்?” என்று வந்திருந்தவர்கள் கோபமாகப் பேச, வேறு வழியின்றி அத்தனையும் தர்மராஜ் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

“இனிமே இந்தத் தப்ப செய்யாதீங்க ?” நீங்க செய்ற தப்பு உங்களுக்கே திரும்ப வருது பாத்தீர்களா? இனிமேலாவது சரியா நடந்துக்கங்க?” என்று சிலர் அறிவுரை கூறினார்கள்.

தான் செய்தது தவறுதான் என்பதை உணர்ந்து கொண்டார் தர்மராஜ்.

” இனிமேல் இந்தத் தவறை தான் செய்யப்போவதில்லை” என்று வருத்தப்பட்டவர், ராஜீவ் முதற்கொண்டு அத்தனை பேரும் கொண்டு வந்திருந்த மிட்டாய்களை ஒரு பையில் வாங்கினார். அதில் ஐநூறு மிட்டாய்க்கு மேல் இருந்தன. இவ்வளவும் மிட்டாயா?” என்று புதிதாக கடைக்கு வந்த ஒருவர் ஆச்சரியப்பட்டார் .

“இவரு கடைக்கு ஒவ்வொரு தடவையும் வரும்போது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் இல்லன்னா அதுக்கு பதிலா சாக்லேட் கொடுத்துட்டு இருக்காரு. இப்படியே பலமுறை, பல ஆளுகளுக்கு பண்ணாரு. இப்ப இவங்க எல்லாம் சேத்து சேத்து வச்ச மொத்த மிட்டாய்களையும் இப்ப இவர்கிட்ட கொண்டு வந்து திரும்ப கொடுத்துட்டு அதுக்கு தகுந்த மாதிரி பொருள் வாங்கி இருக்கிறாங்க. அவங்களும் அந்த மிட்டாய பணமா நினைச்சு அதையே இவர்கிட்ட திரும்ப கொடுத்திருக்காங்க.அவ்வளவுதான் ” என்று சொல்ல வந்திருந்தவர்கள் வாதம், விவாதம் ஆகி பிரச்சனை முடிந்து வெளியேறினார்கள்.

தர்மராஜ் கடையில் ஒருவர் பொருளை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்தார். அவருக்கு மீதி பணத்தைக் கொடுத்த தர்மராஜ், இரண்டு ரூபாய் சில்லறைக்கு இரண்டு மிட்டாய்களை எடுத்தார்.

” ஐயோ வேணாம் சாமி. நாளைக்கு இந்த ஆளும் மிட்டாய்கள மொத்த சேத்து வச்சு திரும்பவும் நம்ம கிட்டயே கொண்டு வந்து கொடுப்பான் ” என்று அந்தக் கடை முழுவதும் சில்லறைக் காசுகளைத் தேடிக் கொண்டிருந்தார், தர்மராஜ்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *