டெல்லி, ஆக. 8–
நீங்கள் இன்னமும் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளீர்கள் என்று டோக்யோவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தப் பிரிவில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இந்தியர்கள் மீள்வதற்குள், வினேஷ் போகத், மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 29 வயதாகும் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் 100 கிராம் அதிக எடை இருந்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களையும், வினேஷ் போகத்துக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்துள்ள நிலையில், டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தனது ஆதரவை தெரிவித்துள்ளார். வினேஷ், நீங்கள் எப்போதுமே தோற்கவில்லை, ஆனால், தோற்கடிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.
எங்களைப் பொறுத்தவரை, நீங்கள் எப்போதுமே ஒரு வெற்றியாளர்தான். நீங்கள் இந்தியாவின் மகள் மட்டுமல்ல, இந்தியாவின் பெருமையும் கூட என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மகள்களின் தோல்வி
அதுபோல, ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக மல்யுத்தப் போட்டியில் முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என போற்றப்படும் சாக்ஷி மாலிக், கூறுகையில், இது நீங்கள் அடைந்த தோல்வியல்ல, இந்த நாட்டில் உள்ள எத்தனை பெண்களுக்காக நீங்கள் போராடினீர்களோ, அந்த ஒட்டுமொத்த மகள்களின் தோல்வி. இது ஒட்டுமொத்த நாட்டின் தோல்வி. இந்த நாடு உங்களுடன் இருக்கிறது, ஒரு வீராங்கனையாக உங்கள் போராட்டம் மற்றும் லட்சியத்துக்கு தலைவணங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
துரோனாச்சாரியால் விருது பெற்ற பயிற்சியாளர் மஹாவூர் போகத் கூறுகையில், தற்போது ஒரு மோசமான சூழ்நிலையில் அவர் முடிவெடுத்திருக்கிறார். மல்யுத்த வீரர்கள் கொடுக்கும் உத்வேகத்தால் அவர் 2028 லாஸ் ஏஞ்ஜெல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க வைப்போம் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.