சிறுகதை

விநாயகர் வேடம் – ராஜா செல்லமுத்து

பரபரப்பாக விநாயகர் வேடம் போட்டுக் கொண்டிருந்தாள் ஒப்பனையாளர் தேவி.

விநாயகரை போன்ற முகம், விநாயகரை போன்ற துதிக்கை, விநாயகரை போன்ற கண்கள். கைகள், அத்தனை ஒப்பனை விஷயங்களையும் சிறுவனுக்கு போட்டுக் கொண்டிருந்தாள் தேவி.

சிறுவனின் அம்மா ஒப்பனை அறைக்கும் சமையல் அறைக்கும் இடையில் நடந்து கொண்டு இருந்தாள்.

என்ன முடிந்ததா ? என்று சிறுவனின் அம்மா கேட்க

தன்னுடைய மொத்தத் திறமையும் விநாயகரைச் செய்து கொண்டிருப்பதிலேயே முனைந்திருந்தாள் தேவி.

பள்ளியிலிருந்து இதோடு நான்கு முறை ஃபோன் செய்து இருந்தாள் நர்சரி பள்ளி ஆசிரியை

என்ன கிளம்பிட்டீங்களா? உங்களுக்காகத்தான் வெயிட்டிங். சீக்கிரம் வாங்க என்று அந்த ஆசிரியை நச்சரிக்க

மேடம் இன்னொரு அரை மணி நேரத்துல நாங்க ஸ்கூல்ல இருப்போம். இப்பதான் விநாயகர் தயாராகிக் கொண்டிருக் கிறார் என்று சிறுவனின் அம்மா சொன்னாள்.

நீங்க வந்த பிறகு தான் சிவபுராணம் ஆரம்பிக்கணும் சிவன் ரெடி, பார்வதி ரெடி ,முருகன் ரெடி ,விநாயகர் மட்டும் தான் வரல. நீங்க வந்துட்டீங்கன்னா, உடனே ஸ்டார்ட் பண்ணிரலாம் என்று மறுபடியும் ஒரு பொருமினாள் அந்த ஆசிரியை .

தேவி முடிஞ்சதா? என்று சிறுவனின் அம்மா குரல் கொடுக்க,

விநாயகர் ரெடி என்று தேவி சொன்னபோது

அந்தச் சிறுவன் விநாயகர் வேடத்தில் பிடித்து வைத்த பிள்ளையாராய் பிரகாசமாய் நின்று கொண்டிருந்தான்.

சிறுவனை காக்க சொல்லிவிட்டு இதோ வரேன் என்று சொல்லிச் சென்ற அந்த தாய், 10 நிமிடமாக காணவில்லை .

அம்மா என்ன ஆச்சு சீக்கிரம் ஸ்கூல்ல திட்ட போறாங்க என்று சிறுவன் விநாயகரின் முகத்தை அவன் முகத்தில் இருந்து சற்று மேலே தூக்கி அம்மாவிடம் கேட்டான்.

இதோ இன்னும் அஞ்சு நிமிஷத்துல ரெடியாயிருவேன் என்று சொன்ன அம்மா வெளியே வந்தாள்.

அப்போது பக்கத்து வீட்டு பெண்ணின் குரல் கேட்டது,

என்ன ஹசினா பேகம் இப்ராஹிமுக்கு விநாயகர் வேடம் போட்டிருக்க போல என்று கேட்டபோது ,

ஆமாக்கா இப்ராஹிம் ஸ்கூல்ல சிவபுராணம் நடக்குது . அதுல இப்ராஹிம்ம விநாயகர் வேடம் போட சொன்னாங்க. அதான் போட்டு கூட்டிட்டு போயிட்டு இருக்கேன் என்று ஹசீனா பேகம் பர்தாவுக்குள் இருந்து பதில் சொன்னாள்.

அந்தக் கருப்பு நிற பர்தாவை அணிந்து கொண்டு வீதியில் நடந்த ஹசீனா பேகம் விரலை பிடித்துக் கொண்டு விநாயகர் வேசத்தில் இருந்த இப்ராஹிம் நடந்தான். இப்ராஹிமைக் கூட்டிக் காெண்டு தெரு வழியாக நடந்து காெண்டிருந்தாள்.

இதைப் பார்த்த மக்கள் – இதுவல்லவோ மத ஒற்றுமை. மன ஒற்றுமை இது தெரியாத மனிதர்கள் தான் எங்கெங்கோ ஏதோ பேசி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூற

அதே தெருவில் இருந்த கோயிலில் குடி கொண்டிருந்த புறாக்கள் சிறகடித்து பறந்து போய் மசூதியில் அமர்ந்தன.

இன்னும் ஒன்றிரண்டு புறாக்கள் சர்ச் கோபுரத்திலிருந்து இந்து கோவில் நோக்கி விரைந்து கொண்டிருந்தன.

விநாயகர் வேடத்திலிருந்த தன் மகன் இப்ராஹிமை கூட்டிக் காெண்டு பள்ளியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தாள் ஹசீனா பேகம்.

Leave a Reply

Your email address will not be published.