செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்

பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி ரத்து

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்

கடலூர் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி அறிவிப்பு

கடலூர், ஆக. 18–

கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி விளக்கம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விநாயாகர் சதூ்த்தி பண்டிகையின் போது பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கிட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், ஆகியோர் தலைமையில் விளக்க கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22–ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடு களிலிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவௌியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

சிறிய கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், திருக்கோவில் நிர்வாகமும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் சார் ஆட்சியர்கள் பிரவின்குமார் (விருத்தாச்சலம்), விசுமகாஜன் (சிதம்பரம்), வருவாய் துறை, காவல் துறை, உள்ளாட்சி துறை, நகராட்சி், பேரூராட்சி அலுவலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *