வாழ்வியல்

விநாயகரை வழிபட்டு வெற்றி மேல் வெற்றி பெறலாம் கணபதியின் ஜாதக சிறப்பு

இன்று விநாயகர் சதுர்த்தி, அதையொட்டி அரண் மகன், உத்தமி புதல்வன் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் துதிக்கப்பட்ட விநாயகரைப் பற்றி காணப் போகிறோம்.

எந்த காரியத்தையும் துவங்குவதற்கு முன்பு விநாயகரை வணங்கிவிட்டே தொடங்க வேண்டும். அப்படி செய்வதால் அனைத்து காரியங்களும் விக்னமின்றி வெற்றியாகவே அமையும். இதனால் தான் விநாயகரை ‘விக்ன ராஜர்’ என்று புகழ்கிறோம்.

விக்ன ராஜா என்றால் இடையூறுகளுக்கெல்லாம் தலைவன். இடையூறுகளை அடக்கி ஆள்பவர், என்ற பொருளை உணர்த்துகிறார்.

சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களில் விநாயகரை ஏன் நாம் முதலில் வணங்கித் துதிக்க வேண்டும் என்ற திருவிளையாடலும் உண்டு.

சிவபெருமான்

தேர் அச்சு முறிந்தது

திரிபுர சம்ஹாரத்திற்கு சிவபெருமான் புறப்படும்போது விநாயகரை வணங்காமல் தன் தேரில் ஏறினார். மகனாகிய விநாயகப் பெருமான், தன் தந்தையோடு விளையாட எண்ணி, தன்னை வணங்காமல் சென்ற தந்தைக்கு விளையாட்டு காண்பித்தார். சிவபெருமான் ஏறிய ரதத்தின் அச்சு முறிந்தது. திகைத்து நின்றார் சிவபெருமான். அக்கணமே அவருக்கு விநாயகரை தான் வேண்டவில்லை என்பது நினைவுக்கு வந்தது. அடுத்த நொடியே விநாயகரை பூஜித்து அவர் போருக்கு சென்று வெற்றியடைந்தார். விநாயகரின் பெருமையை உலக மக்கள் அறிவதற்கே இந்த நாடகம்.

பிள்ளையார் சுழி இடுவது ஏன்?

நாம் எழுதுவதற்கு முன்பு பிள்ளைார் சுழி இட்டுவிட்டே தொடங்குவோம். குழந்தைகளுக்கு அக்ஷர அப்யாஸம் தட்டில் நெல்லை பரப்பி முதலில் விநாயகர் உருவான பிரணவ (ஓம்) என்று எழுதத் துவங்குவார்கள். பிள்ளையார் சுழி இட்டாலே ஆணவம் அடங்கி இறை நினைவு உண்டாகும். இயற்றப்பெனும் எல்லாமே சிவன் செயல் என்று காட்டும் அடையாளமே பிள்ளையார் சுழி.

விநாயகரும் வாஸ்துவும்

கோவில்களில் நுழைந்தவுடன் நமக்கு தரிசனம் தந்து அருள்பாலிக்கும் முதல் கடவுள் விநாயகர். விநாயகரை கன்னிமூல கணபதியே என்று துதிப்பார்கள். வாஸ்துப்படி தென்மேற்கு மூலையில் பாரம் இருக்க வேண்டும். இதனால் தான் விநாயகரை தென்மேற்கு மூலையில் பிரதிஷ்டை செய்வார்கள்.

விநாயகர் பெயர், உருவ தத்துவம்

விநாயகர் என்ற சொல்லுக்கு தனக்கு மேல் ஒரு இறைவன் இல்லையென்று பொருள். வி என்ற சொல்லுக்கு இல்லை என்று அர்த்தம். நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். 18 கணங்களுக்கும் தலைவனானதால் அவரை முழு முதற் கடவுள் விநாயகர் என்று அழைக்கிறோம்.

முழு முதற் கடவுள் விநாயகர்

விநாயகர் கழுத்துக்கு மேல் யானை முகமாகவும் கழுத்துக்கு கீழே தேவ சரீரமும், இடுப்பிற்கு கீழே பூத சரீரமும், கொம்பில்லாத பகுதி பெண்ணாகவும், தந்தமுள்ள பகுதி ஆணாகவும் காட்சி தரும் தெய்வம் விநாயகர்.

விநாயகருக்கு ஒரு கொம்பு, இரண்டு செவி, 3 விழி, 4 தோள், 5 திருக்கரங்கள் கொண்டு சிவன் போலவே காட்சி தருகிறார். இதைத்தான் திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்:

ஐந்து கரத்தனை, ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகதன்தனை ஞானக்கொழுந்தனை

புந்தியியல் வைத்தடி போற்றுகின்றேனே

விநாயகரை வணங்கும் முறை

விநாயகரை மனதால் நினைக்க வேண்டும்.

காயத்தாலே வணங்க வேண்டும்

வாக்கினாலே வாழ்த்த வேண்டும்

அரும்கபுல் சக்தி

விநாயகரை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். அருகம்புல்லை கொண்டு அர்ஜிப்பதற்கு ஒரு மூலக்கதை உண்டு. காலதேவனாகிய எமனின் மகன் அனலாசுரன் தேவர்கள் மற்றும் முனிவர்களை பார்த்த மாத்திரத்திலேயே விழுங்கி வந்தான்.

தேவர்களின் பிணி தீர்ப்பதற்காக விநாயகப் பெருமான் விஸ்வரூபம் கொண்டு அனலாசுரனை விழுங்கினார். விழுங்கிய விநாயகரிடமிருந்து வந்த அனல் மூவுலகையும் வாட்டியது. அக்னி தேவராலேயே விநாயகரை நெருங்க முடியவில்லை. தேவர்கள் மற்றும் முனிவர்கள் பன்னீர், சந்தனம், பால், தேன், இளநீர், தண்ணீர் போன்ற பல அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்து கூட அனல் அடங்கவில்லை.

காசியப முனிவர் 21 அருகம்புல்லை கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்தார். முதல் அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்யும்போதே வெப்பம் தணிய ஆரம்பித்தது. 21வது அருகம்புல் கொண்டு அர்ச்சனை நிறைவடையும்போது வெப்பம் முழுவதுமாக தணிந்திருந்தது. விநாயகர் உடனே என்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிப்பவர்களுக்கு நான் சகல செல்வங்களையும் கொடுத்து அருள்பவன் என்று கூறினார்.

எருக்கம் பூ

எருக்கம் பூ கொண்டு விநாயகருக்கு அர்ஜிக்க பித்ரு காரகனாகிய சூரியனின் அருளும், ஆத்ம பலமும், ஆரோக்கியமும் உண்டாகும்.

விநாயகர் அவதரிக்க காரணமான கஜமுகாசுரன்

கஜமுகாசுரன் என்னும் அசுரனின் தந்தை மரகத முனிவர், தாய் விபூதி என்னும் அசுரப்பெண், குருவாகிய சுக்ராச்சாரியாரின் கட்டளைப்படி சிவபெருமானை நோக்கி 1000 ஆண்டுகள் தவம் புரிந்து எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்னும் சாகா வரமும் பெற்றுக் கொண்டார் கஜமுகாசுரன்.

கஜமுகாசுரன் அனைத்து அசுரர்களையும் ஒன்று திரட்டி தேவர்கள் மற்றும் முனிவர்கள் மீது கொடுங்கோலாட்சி செய்து வந்தான். கஜமுகாசுரன் ஒரு புதுவிதமான தண்டனையை தர இசைந்தார். அவர் தேவர்களையும் முனிவர்களையும் இரு கரத்தாலும் அவர்களின் தலையில் குட்டிக் கொண்டு வலது கரத்தாலே இடது காதையும், இடது கரத்தாலே வலது காதையும் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் செய்தார். காலை, மதியம், இரவு என்று வேளாவேளைக்கு 1008 தடவை தோப்புக்கரணம் போட வைத்தார். அவரது கொடுமை தாங்க முடியாமல் தேவர்களும், முனிவர்களும் சென்று சிவபெருமானின் உதவியை நாடினர். உடனே சிவபெருமான் கஜமுகாசுரனுடைய கொடுங்கோலாட்சிக்கு நிறைவு நெருங்கி விட்டதாக தெரிவித்தார்.

அவதரித்தார்

வினை தீர்க்கும் விநாயகர்

ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று மந்திரத் சித்திர மணிமண்டபத்திற்கு பார்வதி தேவியும், சிவபெருமானும் அனைத்து தேவர்களும், முனிவர்களும் சூழ எழுந்தருளினர். பார்வதி தேவியும் சிவபெருமானும் ஒரே நேரத்தில் அங்கிருந்த பிரணவத்தை உற்று நோக்கினர். அந்தப் பிரணவத்தின் வெளிப்பாடாக தோன்றியவரே விநாயகர்.

அடியவனாக மாறும் கொடியவன்

விநாயகரிடம் சிவபெருமான் கஜமுகாசுரன் என்னும் அசுரன் தேவர்களையும், முனிவர்களையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறான். அவர்களை நீ காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். உடனே விநாயகர் கஜமுகனது இராசதானியாகிய மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். அசுர சேனையை அழித்து கஜமுகாசுரனை நேருக்கு நேர் எதிர்கொள்கிறார். விநாயகர் தொடுத்த பலபல பாணங்கள், அஸ்திரங்கள், பாறையில் விழுந்த மழைத்துளி போல் ஒரு நொடி திகைத்து நின்றார் விநாயகர். உடனே வானத்திலிருந்து வந்த அசீரரியில் கஜமுகாசுரன் சிவபெருமானிடமிருந்த சாகாவரம் பெற்றவன். எந்த ஆயுதத்தாலும் அவரை கொல்ல இயலாது என்று கூறி அசீரரீ மறைந்தது.

மூஞ்சுறு வந்தது

ஞானக்காரகராகிய விநாயகர் உடனே தனது தந்தத்தை நோக்கினார். ஒரு நொடியும் தாமதம் செய்யாமல் தனது ஒரு தந்தத்தை உடைத்து பஞ்சாட்சரத்தை ஜபித்து கஜமுகாசுரன் மீது எய்தினார்.

இரண்டாக பிளவுப்பட்ட கஜமுகாசுரன் மூஞ்சுறு உருவம் பெற்றார். அந்த சிறு உயிரினத்தைக் கண்ட விநாயகப் பெருமான் அதன் மேல் கருணை மழை பொழிந்தார். கஜமுகாசுரன் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் பெற்றார். உடனே கஜமுகாசுரனை தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார்.

சங்கடஹர சதுர்த்தி

விநாயகர் ஒருமுறை சிவலோகத்தில் கொழுக்கட்டைகளை சாப்பிட்டுவிட்டு நடக்க முடியாமல் நடந்து வந்தார். அவரைக் கண்டு சந்திரன் சிரித்தார். உடனே விநாயகர் சந்திரனை உனக்கு களங்கம் பிடிக்கும் என்று சபித்தார்.

சந்திரன் தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் வேண்டினார். உடனே சிவபெருமான் விநாயகர் அளித்த சாபத்தை என்னால் திரும்பப் பெற முடியாது.

ஆனால் சாபத்திற்கு பரிகாரமாக ஒரு மாதத்தில் 15 நாட்கள் தேய்பிறை சந்திரனாகவும், மீதமுள்ள 15 நாட்கள் வளர்பிறை சந்திரனமாகவும் காட்சி தருவாய் என்று கூறினார்.

சதுர்த்தி திதி கணேசருக்கு மிகவும் உகந்த நாள். சுக்லபட்ச வளர்பிறை சதுர்த்தியை வரசதுர்த்தி என்றும், கிருஷ்ணபட்ச சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் கூறப்படுகிறது.

விரதம் இருக்கும் முறை

நடுப்பகல் வரை உள்ள சதுர்த்தியை சுக்ல சதுர்த்தி என்றும், இரவில் சந்திரோதயம் வரை நீடிக்கின்ற சதுர்த்தியை கிருஷ்ண சதுர்த்தி என்றும் கூறுவர். இவை இரண்டுமே விரதத்திற்கு ஏற்றவை. சங்கடஹர சதுர்த்தி இருப்பவர்கள் பகலில் உபவாசம் இருந்து இரவு கோவிலுக்குச் சென்று விநாயகரை வழிபட்டு பின்பு சந்திரனை பார்த்து அர்க்கியம் தந்து பூஜையை முடித்து பின்பு உணவருந்த வேண்டும்.

நைவேத்தியத்தின் மகத்துவம்

கொழுக்கட்டை (மோதகம்)

தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து பூரணம் செய்வார்கள். முக்கண் தத்துவத்தை உணர்த்தும் தேங்காய் மற்றும் கரும்பிலிருந்து உருவாகும் வெல்லம் இரண்டையும் கொண்டு தயாரிக்கும் பூரணமே விநாயகருக்கு இஷ்டமானது. மோதகத்தின் வெள்ளை நிற வெளிப்பகுதி விநாயகர் அவரை வேண்டுபவர்களுக்கு தெளிவான உள்ளத்தை தருவார் என்று உணர்த்துகிறது. கூர்மையான மேல் பகுதி புத்தி கூர்மையை அருள்வார் என்பதை உணர்த்துகிறது.

அப்பம்

அப்ப மாவை நெய்யிலிட்டவுடன் சலசலப்பு தென்படும். மாவில் உள்ள நீர் வற்றியுடன் சலசலப்பு அடங்கிவிடும். அதுபோல விநாயகரை வேண்டுபவருக்கு அவரது மனதில் எழும் சஞ்சலங்கள் நீங்கி தெளிவு மற்றும் சந்தோஷம் பெறும்.

விளாம் பழம்

யானைக்கு ஒரு முழு விளாம்பழத்தை உண்ணக் கொடுத்தாலும் அது அன்னப்பறை எப்படி பாலையும் நீரையும் பிரித்தெடுக்கிறதோ, அதைப் போன்று பழத்தை எடுத்துக் கொண்டு வெளியே தள்ளுகிறது ஓட்டை. அதுபோல மனிதனும் நல்லவைகளை முழுமையாக எடுத்துக் கொண்டு அல்லவைகளை புறந்தள்ளிவிட வேண்டும்.

உகந்த நைவேத்யங்கள்

வாழைப்பழம், மோதகம், வடை, கருப்புக்கடலை சுண்டல், விளாம்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், கரும்பு, அப்பம், அவல்பொறி, பாயசம்

பிள்ளையார் சுழி பிறந்தது எப்படி?

எழுத்துக்களுக்கு எல்லாம் தாயாகிய பிரணவத்தை, முன்னெழுதியே மற்றவையெல்லாம் பின் எழுதினர். பிரணவம் பிள்ளையார் வடிவம், பிரணவத்தின் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி.

ஓங்காரம் பரம்பொருளை உணர்த்தும் சொல், இதற்கு உயர்த்துவது என்றும் பொருள் உண்டு.

விநாயகர் ஜாதகம்

ஸ்ரீ விநாயகப் பெருமானின் ஜாதகத்தில் ஆட்சி கிரகம், சூரியன் ஆவார். நீச்சி கிரகம், சுக்கிரன் ஆவார்.

யோகங்கள்:

1.நீச்சபங்கராஜ யோகம், 2.குருமங்களயோகம், 3.சுபவாசியோகம், 4.வெண்சாமார யோகம்.

லக்னம்: விருச்சிகம், ராசி: கன்னி, லக்னாதிபதி: செவ்வாய், கனியாபதி :புதன், நட்நத்திரம் : அஸ்தம், நட்சத்திராபதி : சந்திரன். லக்னாதிபதி மற்றும் எதிரிஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் உச்சம் இதனால் தன் எதிரிகளையும், தன் பக்தர்களின் எதிரிகளை துவம்சம் செய்து விடுவார்.

நவக்கிரகங்களில் கேது பகவானே ஞான காரகாரக போற்றப்படுகிறது. விநாயகருக்கு லக்னத்தில் கேது பகவான் உச்சம் பெற்று அமர்ந்து போற்றப்படுகிறார். இதனால் தன் எதிரிகளையும், தன் பக்தர்களின் எதிரிகளையும் துவம்சம் செய்து விடுவார்.

நவக்கிரகங்களில் கேது பகவானே ஞான காரகாரனாக போற்றப்படுகிறார்.

விநாயகருக்கு லக்னத்தில் கேது பகவான் உச்சம் பெற்று அமர்ந்து உச்சம் பெற்ற குருபகவானால் ( ஐந்தாம் பார்வை) பார்க்கப்படுவதால் ஞான காரகரான கேது பகவானுக்கு அதிதேவதையாக போற்றப்படுகிறார்.

ஜாதகத்தில் மூன்றாவது வீடு இளைய சகோதரஸ்தானமாகும்.

மூன்றாம் வீட்டில் லக்னாதிபதி உச்சம் பெற்று குருபகவான் பார்க்கப்படுவதால் (ஏழாம் பார்வை) அதிவீரியமுள்ள இளைய சகோதரன் முருகப்பெருமான் உண்டானார். முருகப்பெருமானுக்கு எல்லையில்லாப் புகழ் உண்டாகியது.

பித்ருகரராகிய சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் தந்தைக்குச் சமமான பெருமை அடைந்தார். பத்தாம் வீட்டில் சூரியபகவான் திக்பலம் பெற்றிருப்பதால் செயற்கரிய சாதனைகளைச் செய்து அனைவரையும் ஆட்கொள்கிறார் என்றால் மிகையாகாமல் மேலும் தொழில் ஸ்தானத்திற்கு இரு புறமும் குரு, புத தக்கிற சந்திர பகவான்கள் இருப்பதால் சுபகர்த்தாரியோகமும் வெண்காமர யோகமும் உண்டாகிறது.

சந்திர பகவான் லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுய சளத்தில் (அஸ்தநட்சத்திரம்) இருப்பதால் தன் அன்னையின் ( நம்பிகை ) ஆசியை முழுமையாகப் பெற்றவராகிறார்.

தனம் வாக்கு குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து லக்னம், தைரியஸ்தானம் மற்றும் பூர்வபுண்ணியஸ் தானத்தைப் பார்வை செய்தால் முவுலகிலும் வணங்கத்தக்க புகழைப் பெற்றார் அனைவரும் ஸ்ரீ விநாயகப் பெருமானின் அனுக்கிரகத்திற்குப் பாத்திமாவோமாக ! ஓம் விநாயகாய நம்:

ஜோதிடரின் இயற்பெயர் மீனாட்சி வசுதாரிணி பொறியியல் பட்டப்படிப்பும், நிதிசம்பந்தப்பட்ட மேலாண்மைப் படிப்பைப் படித்து கணினிதுறையில் பணியாற்றுகிறார். குழந்தையிலிருந்தே ஜோதிடத்தில் தனியாத தாகம் உண்டாகி தன் ஜோதிட அறிவை விருத்தி செய்து கொண்டார். இருவருடைய தந்தை (கே.சி.எஸ் ஐயர்) ஜோதிடத்தில் ஆழ்ந்த புலமை மிக்கவராவார் அதனால் ஜோதிடம் இவரின் ரத்தத்தில் இயற்கையாகவே ஓடியது என்று கூறலாம். குலத் தொழில் கல்லாமல் பாகம்படும் என்கிற தமிழ் வழக்கிற்கேற்ப ஜோதிட நுணுக்கங்களை சுலபமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டாகியது என்றால் மிகையாகாது இவருடைய தாயாரும் ஆன்மீகத்திலும், சங்கத்திலும், சமூதாயத்தொண்டிலும் அதிகம் நாட்டமுடையவர். பெற்றோர்களின் தூண்டுதலாலும், குடத்தினுள் இட்ட விளக்காக வழிகாட்டுதாலாலும் ஜோதிடத்தில் ஆராய்ச்சி செய்து பலருக்கும் வழிகாட்டியாக பிரகாசிக்கிறார். அவருடைய ஜோதிடத் தொண்டு மேன்மேலும் சிறக்க நாமும் அவரை வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *