…
தாம்பரத்திலிருந்து கோடம்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் பயணம் செய்து காெண்டிருந்தான் ஆனந்த்.
அந்த ரயிலில் விதவிதமான மனிதர்களைப் பார்த்தான். எத்தனையோ மனிதர்கள் . தங்கள் வாழ்க்கைக்கான வியாபாரங்களை செய்து கொண்டிருந்தார்கள். பார்வை இழந்தவர்கள் யாசகம் கேட்பதற்கு பதிலாக ஏதோ ஒன்றை விற்று தங்கள் பிழைப்பைக் கவனித்துக் கொண்டார்கள் .
கல்லூரி மாணவர்கள், ஏழை பணக்காரன் என்று அத்தனை மனிதர்களையும் உள்ளடக்கி ஓடிக்கொண்டிருந்தது அந்த மின்சார ரயில்.
தாம்பரத்தில் புறப்பட்ட அந்த ரயில் ஒவ்வொரு நிறுத்தங்களாக நின்று மனிதர்களை ஏற்றுவதும் இறக்குவதுமாய் இருந்தது.
ஆனந்த கண்ட ஒரு காட்சி தான் அவன் மனதை வேறு மாதிரியான திசைக்கு அனுப்பியது. இவர்களெல்லாம் படிக்கத்தான் போகிறார்களா ?அல்லது தன் உயிரை மாய்த்துக் கொள்ள போகிறார்களா ? இந்த வெட்டி சாகசங்களால் என்ன பயன்? இவர்களின் தாய் தந்தை இந்த மாணவர்களைப் படிக்க தானே அனுப்புகிறார்கள் ?பிறகு இந்த வித்தை ?இந்த சாகசம் ? என்று ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.
ஒவ்வொரு நிறுத்தங்களிலும் படிகளில் நின்று கொண்டு இறங்குபவர்களையும் ஏறுபவர்களையும் தொந்தரவு செய்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். தவிர ரயிலை ஓட விட்டு அதன் பின்னாலேயே ஓடி ஏறுவதும் ஓடும் ரயிலில் படிகளில் நின்று ஆபத்தான பயணம் செய்வதுமாக இருந்தார்கள்.
அந்த ரயிலில் பயணித்த எந்த மனிதர்களும் இதைப்பற்றி பேசவோ இந்த மாணவர்களின் அட்டூழியங்களைத் தட்டிக் கேட்கவாே இல்லை .
ஆனந்துக்கு மட்டும் சுருக் என்று கோபம் வந்தது .
தம்பிகளா நீங்க எல்லாம் படிக்கத் தானே போறீங்க? பிறகு ஏன் இந்த மாதிரியான வித்தை காட்டிக்கிட்டு இருக்கீங்க. இந்த வெட்டித்தனமான செய்கையால ஏதாவது நடக்கப் போகுதா? இல்ல நீங்க படியில நின்னுட்டு பயணம் போறதுனால உங்களுக்கு பதக்கம் ஏதும் தரப் போறாங்களா? ஓடுற ரயில்ல ஏறி இறங்குகிறீங்க. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்ட உங்க உயிர் தானே போகும் ? ஏன் இந்த வீணான வேலை என்று தைரியமாக கேட்டான் ஆனந்த்.
ஆனந்தின் பேச்சுக்கு அந்த மாணவர்கள் ஒருவர் கூட பதில் சொல்லவில்லை .மாறாக சிரித்துக்கொண்டார்கள்
தம்பி நான் உங்கள தான் சொல்றேன் அறிவு இருக்கா இல்லையா? என்று கேட்டபோது
ஹலோ நாங்க எல்லாம் யூத் அப்படித்தான் செய்வோம். இதில ஒரு கிக் இருக்கு தெரியுமா? உங்கள மாதிரி ரயிலுக்குள்ள உட்கார்ந்து வர எங்களுக்கு புடிக்கல .படிகள்ல தாெங்கிட்டு வார மகிழ்ச்சி உங்களுக்கு என்ன தெரியும்? என்று ஒருவன் ஆனந்திடம் திருப்பி கேள்வி கேட்டான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் ஆனந்தை கையசைத்துக் கூப்பிட்டார்.
தம்பி இங்க நல்லது சொல்ற எல்லாரும் கேனப் பயலுக தான். இவனுகளுக்குகு புத்தி சொல்லி பிரயோஜனம் இல்ல. பட்டா தான் தெரியும். நீங்க வாங்க தம்பி உட்காருங்க
என்று ஆனந்தைப் பிடித்து அமர வைத்தார் அந்தப் பெரியவர்.
அப்போது ஏதோ இசை சத்தம் ஒன்று கேட்டது.
என்ன இது என்று ஆனந்த் மற்றவர்கள் திரும்பி பார்த்தார்கள். ஈயத் தட்டை கீழே பரப்பி வைத்து ஒரு பெண் குச்சியைக் கொண்டு இசை எழுப்பிக் கொண்டு இருந்தாள்.
ஒரு சின்னக் குழந்தை தன் உடம்பை வளைத்து நெளித்து அந்த ரயிலில் வித்தை காட்டிக் கொண்டிருந்தது.
கையில் ஒரு சின்ன இரும்பு வளையத்தை வைத்துக்கொண்டு அதன் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தது. அந்த குழந்தையின் சாகசம், வித்தை ரயிலில் இருப்பவர்களை பிரமிக்க வைத்தது .ஆனந்த் இதைப் பார்த்தான்.
அந்த பெரியவர் ஆனந்தைத் தொட்டு
தம்பி பாத்தீங்களா? இவங்க வித்த காட்டுறது அவங்க வாழ்க்கையை பலப்படுத்துவதற்கு. நிச்சயமாக ஒவ்வொரு ரயில் பெட்டிலயும் இந்த மாதிரி தான் இசையை எழுப்பி பணம் வாங்குவாங்க. கண்டிப்பா 500 ரூபாய் ,ஆயிரம் ரூபாய் சம்பாதித்து விடுவாங்க.
ஆனா, காலேஜ், ஸ்கூலுக்கு போறேன்ற பேர்ல ரயிலோட படிக்கட்டுல , பஸ் படிக்கட்டுல நின்னு இவங்க வித்தை காட்டுறது அவனுகளுகு மரணத்தைத் தான் ஏற்படுத்தும் . இல்ல ஏதோ ஒரு வகையிலேயே இழப்பு ஏற்படும்.
தம்பி இந்தச் சின்ன குழந்தைக்கு இருக்கிற அறிவு கூட அவனுகளுக்கு இருக்காது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அந்தக் குழந்தை தட்டை எடுத்துக்கொண்டு எல்லோரிடமும் யாசகம் கேட்டது. அந்தப் பெரியவர், ஆனந்த் , அந்தப் பெட்டியில் இருந்த நிறைய பேர் தங்கள் பையில் இருந்த பணத்தை எடுத்து அந்தக் குழந்தைக்குப் போட்டார்கள்.
சிரித்துக் கொண்டே அதை வாங்கினாள் அந்த சிறுமி. ஒரு நிறுத்தத்தில் ரயில் நின்றது. அப்போதும் படிகளில் தாெங்கிக் கொண்டிருந்த அந்த மாணவர்கள் இறங்குவர்களுக்கும் ஏறுபவர்களுக்கும் இடையூறாக நின்று கொண்டு தான் இருந்தார்கள் . ஏறியவர்களும் இறங்கியவர்களும் அவர்களைத் திட்டிக் கொண்டுதான் சென்றார்கள்.
ஒரு சில மாணவர்கள் திட்டியவர்களைக் கிண்டல் செய்தார்கள். பின் கொத்தாக படியை விட்டு இறங்கியவர்கள், ரயிலை ஓடவிட்டு அதன் பின்னாலேயே ஓடிப் படியில் இருந்த கம்பியைப் பிடிக்க முற்பட்டனர் . மெல்லச் சென்று கொண்டிருந்த அந்த ரயில் இந்த மாணவர்கள் பிடிக்கச் சென்றபோது வேகமெடுத்திருந்தது .
அவர்களின் பிடி தளர்ந்தது. இரண்டு பேர் ரயில் சக்கரத்தில் விழுந்தார்கள். நான்கு பேர் பிளாட்பாரத்தில் விழுந்தார்கள் விழுந்த இரண்டு பேரில் கதி என்ன என்பதை தண்டவாளங்களில் சிந்திய ரத்தம் சாட்சி சொன்னது. பிளாட்பாரத்தில் விழுந்த நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
ரயில் சக்கரங்கள் தண்டவாளங்களில் நின்றன,
பெத்தவங்க படிக்கத்தான பிள்ளைகள அனுப்புறாங்க. இப்படி படிகள்ல நின்னு வித்த காட்டவா அனுப்புறாங்க? இப்ப என்ன ஆச்சு? என்று பயணிகள் வருத்தப்பட்டுக் கொண்டார்கள் .
காயம்பட்டவர்களையும் உயிர் விட்டவர்களையும் அள்ளிப் போக ஆம்புலன்ஸ் வந்தது.
தன் கையில் இருந்த தட்டில் பணத்தை சேமித்துக் கொண்டு வெளியே வந்தாள், அந்த வித்தைக்காரச் சிறுமி.
பெருமூச்சு விட்டபடியே பேசினார் அந்தப் பெரியவர்.
தம்பி பாத்தீங்களா? நான் சொன்னேல்ல இவங்களுக்கு இவ்வளவு பட்டாலும் புத்தி வராது.உசுரும் போச்சு. படுகாயமும் ஆகிப் போச்சு .இதெல்லாம் மறந்துட்டு மறுநாளே படிகள்ல தாெங்கிட்டு தான் வருவானுக
என்றார் அந்தப் பெரியவர்.
விபத்தான ரயில் புறப்படத் தாமதமானது .
எதிர் திசையில் இருந்த இன்னொரு ரயில் புறப்பட ஆயத்தமாக நின்று கொண்டிருந்தது.
வித்தை காட்டும் அந்தத் தாயும் அந்தச் சிறுமியும் அந்த ரயிலில் ஏறிஅங்கேயும் இசை எழுப்பினார்கள். அந்த சிறுமி இரும்பு வளையத்திற்குள் நெளிந்து வளைந்து உள்ளே போய்க் கொண்டிருந்தாள்.
ரயில் மெல்ல மெல்ல வேகமெடுத்திருந்தது.
சில மாணவர்கள் ரயிலின் உள்ளே இருந்தபடியே ரகளையில் ஈடுபட்டிருந்தனர்.
சில மாணவர்கள் ஓடும் ரயிலில் ஏறினர்.சிலர் படிகளில் தொங்கிக் கொண்டு வந்தனர்.ரயில் விரைந்து கொண்டிருந்தது.
ரயிலின் உள்ளே சிறுமி வித்தை காட்டிக் கொண்டிருந்தாள். அவளின் தாய் இசை எழுப்பி கொண்டிருந்தாள் .
ஆபத்தைத் தேடி அந்த மாணவர்கள் வித்தை காட்டியபடியே படிகளில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.