சிறுகதை

விதியை மதிகொண்டு வெல்வதே அறிவு… | ராஜா செல்லமுத்து…

அந்தத் தெரு முழுவதும் அதிகாலையென்று கூடப் பாராமல் ஆட்கள் கூடி நின்று கொண்டிருந்தார்கள்.

எல்லோர் முகத்திலும் சோகம் அப்பியே கிடந்தது. விழும் குளிர் அவர்களுக்கு அந்நிலையமாகவே இருந்தது.

எப்ப நடந்ததாம்?

நேத்து ராத்திரி ரெண்டு மணிக்கு நல்ல பையன்ங்க. சின்ன வயசில்ல

ஆமா

இப்ப என்ன வயசிருக்கும்?

என்னங்க இருபது இருபத்தி நாலு வயசிருக்கும் இவ்வளவு சின்ன வயசா? வியாதிக்கு என்னங்க வயசு அது வந்தா யாராயிருந்தாலும் அதுக்கு தகுந்த மாத்திரை மருந்து எடுக்கலன்னா அவ்வளவு தாங்க. மந்திரமும் தந்திரமும் ஆசிர்வாதமும் ஆறுதலும் வேப்ப எலையும் கருவேப்பில்லையும் நோயச் சரிபண்ணும்னு நெனைக்கிறது நம்ம தப்புதாங்க. அதுக்கு தகுந்த ட்ரீட்மெண்ட் எடுத்திருந்தா சரியாயிருக்கும்.

இப்பப் பேசி என்ன பிரயோசனம். எல்லாம் முடிஞ்சு போச்சு என்று பேசிக்கொண்டிருந்தது அங்கு கூடியிருந்த கூட்டம்.

எப்ப கிளம்புறாங்க. காலையில மூணு மணிக்கு

மணி ஆச்சே

ம்… தயாளனுக்கு ஒரே பையன் தான

ஆமா எறந்த பையன் பேரு என்ன?

ராஜாங்கம்

எங்க வேலை செஞ்சிட்டு இருந்தான்.

வேலை இல்ல ஊழியம் கடவுளுக்கு செய்ற ஊழியம்னு சொல்லிட்டு சம்பளமும் இல்ல ஒண்ணும் இல்ல எங்க திருநெல்வேலி பக்கத்தில இருக்கிற ஒரு ஊர்ல.

ம்… இப்ப கெளம்புனா திருநெல்வேலி போய்ச்சேர எட்டு மணி நேரம் ஆகும்.

போனதும் காரியத்த முடிச்சிட்டு வந்திட்டே இருக்க வேண்டியது தான் என்று பேசும் போதே தயாளன் வீட்டின் முன்னால் வந்து நின்றது வேன் . அந்த அதிகாலையில் கூடிய சொந்தங்கள் இறந்து போன ராஜாங்கத்தைப் பற்றி பேசிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் இது பற்றி எதையும் சட்டை செய்யாமல் தன் மகன் இறந்து போனதை முகூர்ந்த நாளுக்கு சேதி சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார் தயாளன். பெற்ற தாய் மட்டும் பிழியப் பிழிய அழுது கொண்டிருந்தாள்.

பெத்த மனசுங்க எப்படி சும்மா இருக்கும். ஆனா இந்த தயாளனுக்கு மட்டும் தான் கவலையில்லைன்னு நினைக்கிறேன். அவர் பாட்டுக்கு செல்போன்ல எப்பிடி சேதி சொல்லிட்டு இருக்காருன்னு பாருங்க என்று ஒருவர் சொன்ன போது…

என்னங்க செய்றது நம்ம கையில எதுவும் இல்லீங்க கடவுள் குடுத்தார் கடவுள் எடுத்தார் ;இதப் பேசி எந்தப் பிரயோசனமும் இல்ல; அவனோட ஆயுசு அவ்வளவுதான் நாம என்னங்க இந்த பூமியில முன்னூறு வருசமா இருக்கப் போறோம். இப்ப என்னோட மகன் ராஜாங்கம். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு உங்க மகன் அடுத்த நாள் அவரோட மகன் இப்படி எல்லாருமே போயிட்டே இருக்க வேண்டியது தான். நாம கவலைப்பட்டு என்னங்க பிரயோசனம் அவ்வளவு தான். வாங்க போயி அடக்கம் பண்ணிட்டு வருவோம் என்று ரொம்பத் தெளிவாகவே பேசினார் தயாளன். என்னய்யா இந்த ஆளு கொஞ்சங்கூட வருத்தமே இல்லாம பேசிட்டு இருக்கார்.

அதாங்க அவங்களோட மதம் .என்னது மதமா?

ஆமா இவரு தன்னோட மகன அவரோட மதத்துக்கே தாரை வார்த்திட்டாருல்ல. அதுக்கப்பறம் அவன் அந்த மதத்துக்கு தான் சொந்தம். வீட்டுக்கு வரமுடியாது. சொந்த பந்தமுன்னு எதுவும் பேச முடியாது. சும்மா கடவுளோட தொண்டனா மட்டும் வேணும்னா பேசிக்கிரலாம் அவ்வளவு தானே யொழிய மத்தபடி இவங்களோட பையனுக்கும் இவங்க குடும்பத்துக்கும் தொடர்பே இல்ல. கல்யாணமும் பண்ண முடியாது என்று பேசியவர்கள் வேனில் ஏறி உட்கார்ந்தார்கள்.

என்ன போகலாங்களா? என்று வேன் ஓட்டுநர் கேட்க….

போகலாம் என்று மொத்தக் குரலும் ஒத்தக் குரலாய் ஒலித்தது.

ராஜாங்கத்தைப் பெற்றவள் மட்டும் தான் ஓயாமல் அழுது கொண்டே இருந்தாள்.

மற்ற சொந்தங்களெல்லாம் எப்படி? என்று ஒருவர் கேட்க அவங்கவங்க ஊர்ல இருந்து அப்படியே வந்திருவாங்க என்று தயாளன் சொல்ல வேன் கொஞ்சம் வேகம் எடுத்திருந்தது.

அப்படியிப்படியின்னு வேன் திருநெல்வேலியை எட்டியபோது மதியம் இரண்டு மணியைத் தொட்டு நின்றது கடிகாரம் .பெற்றவள் மட்டுமே எல்லா மனிதர்களையும் விட்டுவிட்டு விடுவிடுவென ஓடினாள்.

ஓ.வென அழுது உருண்டாள் .

அங்கே …. அங்கே …. அங்கே …

மகன் ராஜாங்கம் வெள்ளைத் துணி போர்த்தப்பட்டு தூங்குவது போல் அசையாமல் கிடத்தப் பட்டுக்கிடந்தான்.

தன் மகனின் கால்களைப் பிடித்து ஐயய்யோ ராஜாங்கம் என்று அவள் அழுத போது அதற்குள் அங்கு வந்திருந்த மொத்தச் சொந்தங்களுக்கு என்னவோ போலானது . அடச்சே ஆளு சின்ன பையன் தாங்க உடம்பு சரியில்லாம போகும் போதே ஆஸ்பத்திரிக்கு போயிருந்தா எப்படியாவது அதவிட்டுட்டு என்று ஒருவர் இழுத்தபோது இது அவங்க மதம் சம்மந்தமான விசயம்ங்க அவங்க அந்த நோயாயிருந்தாலும் ஊசி மருந்து எதுவும் போட்டுக்கிற மாட்டாங்க மந்திரம் ஜெபத்திலேயே சரியாயிரும்னு சொல்லுவாங்க

ஓ அப்படியா?

ஆமா தெரியாதா? அது தான அவங்களோட கொள்கை.

அப்படின்னா அந்தக் கடவுள் இந்த பையன் காப்பாத்தியிருக்கணுமே . அப்பெறம் ஏன் இந்தக் பயலோட உசுர எடுத்தது. நோய் வேற கடவுள் வேறங்க. ரெண்டும் ஒண்ணுல்ல .கடவுள்ங்கிறது மனசு. நோய்ங்கிறது உடம்பு இத தெரிஞ்சுக் கிட்டா ராஜாங்கத்த பொழைக்க வச்சிருக்கலாம். தப்புப்பண்ணிட்டாங்க என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கே அருகில் உள்ள ஒரு அறையில் பூஜை நடந்து கொண்டிருந்தது.

என்னங்க ஒரு பையன் வெட்டியா இப்படி செத்துப் போய் கெடக்கான் . அத விட்டுட்டு பூஜை பண்ணிட்டு இருக்காங்களே ’’ஆதங்கப்பட்டார் ஒருவர் .

அது தாங்க அவங்களோட மதம்.

என்னய்யா பொல்லாத மதம் ; மனுசன் ; மனுச நேசமில்லாத மதம். எல்லா மதமும் மனுசன நோக்கித்தான்யா இருக்கனும் . மனுசன மறந்து மதமில்ல . நாம சொல்றது சரி. அவங்க அப்பன் அம்மைக்கு அறிவு எங்க போச்சு. புள்ளைய கொண்டு போயி இப்படி செய்யலாமா? என்ற சொந்தங்கள் பூஜை முடியும் வரை காத்திருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து பூஜை முடித்து எங்கிருந்த ஆட்கள் வந்தனர்.

சரிங்க ராஜாங்கத்துக்கு பூஜை பண்ணலாமா? என்று அங்கிருந்த ஒரு பெரியவர் கேட்க சரி என எல்லோரும் தலையாட்டினார்கள். பிணத்தின் முன்னால் பூஜை ஆரம்பிக்கப்பட்டது.

ஒருவர் மந்திரங்கள் சொல்லச் சொல்ல கூடியிருந்தவர்கள் அதைத் திரும்பத் திருப்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் . சற்று நேரத்தில் பூஜை முடிக்கப்பட்டது.

அடக்கம் பண்ணலாமா?

போகலாம் என்று பிணம் எடுக்கப்பட்டு புதைக்கும் இடம் தேடிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

நம்மோட மூத்த தலைவர் வராதுனால துணைத்தலைவரே எல்லாக்காரியங்களையும் செய்வார் என்று ஒருவர் நடந்து கொண்டே சொல்ல…

யாருங்க அந்த தலைவர்?

இந்த மதத்தோட தலைவர் .

ஓ இவ்வளவு பெரிய விசயம் நடந்திருக்கு. அவரு இங்க இல்லாம எங்க போனாரு? என்று ஒருவர் கேட்ட போது அவருக்கு உடம்புக்கு முடியலீங்க ஹாஸ்பிட்டல் போயிருக்காரு என்ற போது பிணத்தோடு நடந்து கொண்டிருந்த எல்லோரும் விக்கித்து நின்றார்கள்.

விதியை மதிகொண்டு வெல்வதே அறிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *