வாழ்வியல்

விண்வெளி வீரர்களுக்கு உதவும் புதிய போக்குவரத்து விண்கலன்!

அண்மையில், தனியார் விண்வெளி அமைப்பான, ஸ்பேஸ் எக்சின், ‘பால்கன் 9 ராக்கெட்’ சுமந்து சென்ற, ஒரு விண்கலன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன், தானாகவே இணைந்தது.

ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய, ‘க்ரூ டிராகன்’ விண்கலன், விண்வெளி வீரர்களை பூமியில் இருந்து சுமந்து சென்று, ஐ.எஸ்.எஸ்., நிலையத்தில் சேர்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

ஆனால், தற்போதைக்கு உண்மையான வீரர்களை வைத்து அனுப்பாமல், பொம்மை மனிதன் ஒன்றை, மட்டும் வைத்து அனுப்பி, வெள்ளோட்டம் பார்த்திருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ். க்ரூ டிராகன் கலன், ஐ.எஸ்.எஸ்.,க்கு, 180 மீட்டர் தொலைவில் இருந்து, மெல்ல தானாகவே அருகே சென்று, விண்வெளி நிலையத்தின், ‘ஹார்மனி’ என்ற அறையில் திட்டமிட்டபடி தானாகவே இணைந்தது.

பின், நிலையத்தில் இருந்த அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்ய விண்வெளி விஞ்ஞானிகள் இணைப்புக் கதவை திறந்து, தகுதிச் சோதனைகளைச் செய்தனர். எல்லாம் சரியாக இருக்கவே, அதிலிருந்த, 181 கிலோ எடையுள்ள உணவு மற்றும் கருவிகளை எடுத்துக் கொண்டனர்.

ஐந்து நாட்கள் வரை இணைந்திருந்து, பின், க்ரூ ட்ராகன் கலன் பூமிக்குத் திரும்பும் ஒத்திகைக்குத் தயாராகும். அட்லான்டிக் கடலில் மென்மையாக இறங்க, அதில் பாராசூட்களையும், ஸ்பேஸ் எக்ஸ் விஞ்ஞானிகள் வைத்து அனுப்பியுள்ளனர்.

இந்த வெள்ளோட்டம் வெற்றி பெற்றால், இத்தனை ஆண்டுகளாக சரக்குகளை மட்டும் எடுத்துச் சென்ற டிராகன் கலன், விண்வெளி வீரர்களுக்கான போக்குவரத்து வாகனமாகவும் செயல்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *