அறிவியல் அறிவோம்
விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையம் உருவாக்க பெரம்பலூர் தமிழ் விஞ்ஞானி சக்திகுமார் சாதனை திட்டம்தீட்டி செயலாக்கிவருகிறார்.
விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் முயற்சியில் இறங்கியுள்ள அவர் சென்னை ஸ்டார்ட் அப் Orbit Aid, என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளார். யுனிகார்ன் இந்தியா வென்சர்ஸ் இடம் இருந்து முதன்மை விதை நிதியாக 1.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளது.
சிறு வயது முதலே விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்தவர் பெரம்பலூரைச் சேர்ந்த சக்திகுமார். பல கோடி செலவில் விண்ணுக்கு செலுத்தப்படும் செயற்கைகோள்கள் சில ஆண்டுகளுக்கு மேல் பயனில்லாமல் விண்வெளியில் சுற்றுவதற்கு என்ன தீர்வு தர முடியும் என்று சிந்தித்து ‘ஆர்பிட் எய்ட்’ (Orbit Aid) என்கிற ஸ்டார்ட் அப் தொடங்கியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வடக்களுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திகுமார். படித்தவர்கள் அதிகம் இல்லாத ஒரு சின்னக் கிராமத்தில் வளர்ந்த இவருக்கு, விண்வெளி தொடர்பான ஆர்வம் பள்ளிப் பருவத்தில் இருந்தே இருந்திருக்கிறது. விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தவர் ஏரோநாடிகல் என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். அதன் பின்னரே ஏரோநாடிகல் என்ஜினியரிங் வேறு ஏரோஸ்பேஸ் வேறு என்கிற புரிதலே வந்திருக்கிறது.
எனினும், இளநிலை ஏரோநாடிகல் என்ஜினியரிங் படித்துக் கொண்டே விண்வெளி தொடர்பான தன்னுடைய ஆய்வுகளைச் செய்து மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டவர்களிடம் விளக்கிக் கூறி பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். இளநிலை முடித்த பின்னர் முதுநிலை படிப்பை ராக்கெட் மற்றும் சாட்டிலைட் தொடர்பான படிப்பாக தேர்வு செய்து படித்துள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்த பின்னர் 2011ம் ஆண்டு ஐஐஎஸ்-இல் (Indian Institute of science) ஆய்வாளராக பணியில் சேர்ந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார் சக்திகுமார். 2011 முதல் 2014 வரை சாட்டிலைட்களின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டவருக்கு விண்வெளியில் இருக்கக் கூடிய ஒரு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிற எண்ணம் தோன்றி இருக்கிறது.சேட்டிலைட்கள் சந்திக்கும் பிரச்சனை – OrbitAid தரும் தீர்வு
ஆண்டுதோறும் தோராயமாக 60 சாட்டிலைட்கள் வரை விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றன. தேவையில்லாமல் காசு விரயமாகிறது என்று பெரும்பாலான மக்கள் புரிதலின்றி கருதுகின்றனர், ஆனால் சாட்டிலைட்கள் செய்யும் பயன்கள் ஏராளமானவை. ஒரு சாட்டிலைட்டின் ஆயுட்காலம் என்பது 5 முதல் 6 ஆண்டுகள் இருக்கும், அதன் பின்னர், அவை செயல்படாமல் போவதற்கு முக்கியக் காரணம் அதில் இருக்கும் எரிபொருள் தீர்ந்து போவதே. “சாட்டிலைட்டில் பொருத்தப்படும் சோலார் தகடுகள் உள்ளே இருக்கும் இயந்திரங்கள் இயங்குவதற்கான சோலார் மின்சக்தியை உருவாக்குகின்றன. எனினும் புவி வட்ட பாதையில் சாட்டிலைட் சுற்றி வருவதற்கு எரிபொருள் தேவை, அந்த எரிபொருள் தீர்ந்து போவதால் பயனற்ற பொருளாக விண்வெளியில் பல சாட்டிலைட்கள் சுற்றி வருகின்றன. இவற்றின் பயன்பாட்டை அதிகரிக்கவே சாட்டிலைட்டுகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக விண்வெளியில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை உருவாக்கலாம் என்கிற சிந்தனை தோன்றியது,” என்கிறார் Orbit aid நிறுவனரும் செயல் இயக்குனருமான சக்திகுமார்.இதனால் பல கோடி ரூபாய் மக்கள் பணம் சேமிக்கப்படும் என்று கூறுகிறார் சக்திகுமார்.
ஒரு செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டு அது புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது என்பது வரைக்கும் நாம் செய்திகளில் கேட்டு தெரிந்து கொண்டிருப்போம். ஆனால் அதற்கு பின்னர் அதன் செயல்பாட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் எண்ணிலடங்காதவை. இத்தகைய செயற்கைகோள்கள் குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகு செயல்படாமல் விண்வெளியில் குப்பைகளாக மிதந்து கொண்டிருக்கின்றன. அவற்றை இயக்க முடியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் அதில் இருக்கும் எரிபொருள் தீர்ந்து போவது.”விண்வெளியிலேயே செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் ஒரு வசதியை ஏன் ஏற்படுத்தக் கூடாது என்று அதற்கான ஆராய்ச்சியில் இறங்கினேன். என்னுடன் நிகில் பாலசுப்ரமணியன் மற்றும் மனோ பாலாஜி இணைந்து செயல்படத் தொடங்கினர். என்னுடைய சேமிப்பில் இருந்து ரூ.50 லட்சத்தை முதலீடாக்கியே இந்த ஸ்டார்ட் அப்பை தொடங்கினேன்.”
முதலீடுகள் பெற்ற OrbitAid
தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிதியை பெறுவதற்காக இரண்டாவது முறை விண்ணப்பித்து விளக்கம் அளித்த போது, அதன் எதிர்காலத்தை உணர்ந்து கொண்டு ரூ.4.5 கோடியை Startup TN முதலீடு செய்தது. இதன் மூலம் தமிழக அரசு இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளது, என்று கூறுகிறார் சக்திகுமார். “யுனிகார்ன் இந்தியா வென்சர்ஸ்ன் முதன்மை விதை நிதியாக 1 மில்லியன் டாலர் (ரூ.8 கோடி) தற்போது OrbitAid பெற்றுள்ளது. இந்த நிதிகளைக் கொண்டு புவிவட்டப் பாதையில் வழங்க உள்ள சேவைகளுக்கான பணிகளை இவர்கள் தொடங்க உள்ளனர். இந்த ஆண்டில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான சோதனை ஓட்டத்தையும் நிகழ்த்தி பார்க்க திட்டமிட்டுள்ளதாக,” சக்திகுமார் தெரிவித்துளளார்.
அண்மையில் ஆர்பிட் எய்டின் காப்புரிமை பெற்ற SIDRP கொண்டு ஃப்ரிடாவில் புவிஈர்ப்பு விசையில்லா விமான சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இந்த சோதனை மூலம் புவிவட்டப்பாதையில் சாட்டிலைட்டுகளுக்கு எரிபொருள் நிரப்புவது சாத்தியம், என்பதை சக்திகுமார் குழுவினர் நிரூபித்துள்ளனர். Orbit Aid பயணத்தில் இந்த சோதனை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை உருவாக்கியுள்ளது, வானமே எல்லை என்பதைக் கடந்து விண்வெளியில் தனது சந்தையை ஏற்படுத்தி உள்ளனர்.
கடந்த ஓராண்டாக இந்நிறுவனம் செயற்கைக்கோள் இணைவு மற்றும் எரிபொருள் நிரப்பு சோதனைகளுக்காக பல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த ஓராண்டில் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டு புவிவட்டப் பாதையில் சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.