தலையங்கம்
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) அடைய உள்ளது. 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த “பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்” எனப்படும் விண்வெளி மையத்தை நிலைப்படுத்தும் திட்டத்திற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த விண்வெளி மையம், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல் அம்சமாக பார்க்கப்படுகிறது. 2028ஆம் ஆண்டில் இதன் முதல் பாகம் விண்ணில் செலுத்தப்படும் என்றும், 2035க்குள் முழுமையாக செயல்படத் துவங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த மையம் மூலம் 3 அல்லது 4 விண்வெளி வீரர்கள், நீண்ட காலத்திற்கு விண்வெளியில் தங்கி ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும். குறுகிய காலத்திற்கு ஆறு பேர் வரை தங்கும் வசதி இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியை இந்தியாவுக்குள் கொண்டு வருவதோடு, சூரிய மண்டலத்தில் நிலவும் புதிர்களையும் தீர்க்க உதவக்கூடிய முக்கியவசதியாக அமையும்.
இந்த மையம், நிலவுக்குச் செல்வதற்கான மற்றும் செவ்வாய் கோளுக்கு மனிதரை அனுப்பும் இந்தியாவின் எதிர்கால திட்டங்களுக்கு அடிப்படை எனக் கருதப்படுகிறது. முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் போன்ற விஞ்ஞானிகள் இந்த திட்டம் இந்தியாவை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி நாடாக மாற்றக் கூடியவையாகும் எனக் கூறுகின்றனர்.
இந்தியாவின் சொந்த விண்வெளி மையம், சர்வதேச விண்வெளி மையம் (ISS) மற்றும் சீனாவின் டியான்கோங் விண்வெளி மையத்திற்குப் பிறகு பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைகொள்ளும் மூன்றாவது விண்வெளி மையமாக அமையும். இது, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் தன்னிறைவு அடைவதோடு, எதிர்கால ஆராய்ச்சி திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஒரு பெரிய முயற்சியாகும்.
விண்வெளி மையத்தின் கட்டமைப்புகள்
பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் ஐந்து முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது:
** அடிப்படைப் பாகம் (Base Module): இது 2028 ஆம் ஆண்டில் ஆளில்லாமல் விண்ணில் செலுத்தப்படும். பிறகு மனிதர்கள் பயன்படுத்தும் வகையில் சோதனைகள் செய்யப்பட்டு களத்தில் அமைகிறது.
** இணைப்புப் பாகம் (Docking Module): பூமியில் இருந்து விண்வெளிக்கருவிகள் மற்றும் வீரர்கள் வரும்போது இவை மையத்துடன் இணைப்பதற்கான பாகமாகும்.
** ஆராய்ச்சிப் பாகம் (Research Module): இங்கு விண்வெளியில் புவியீர்ப்பு விசையற்ற சூழலில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
** ஆய்வுக் கூடம் (Laboratory Module): கூடுதல் ஆய்வுகளுக்கு தனியான இடம் வழங்கும் பாகமாக இது அமையும்.
** பொது பணியிடப் பாகம் (Common Working Module): விண்வெளி வீரர்கள் அன்றாட பணிகளைச் செய்வதற்கான இடமும், அவர்களுக்கான தங்குமிட வசதிகளும் இதில் உள்ளன.
இந்த மையம், இந்தியா மட்டுமின்றி உலகிலேயே குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. விண்வெளியில் பல மாதங்கள் வரை விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான வசதிகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள், சூரிய ஒளித் தகடுகள் மூலம் மின்சாரம் பெறும் அமைப்புகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் இதில் அடங்கும்.
தற்போது பல முன்னணி ஆய்வுகளை நடத்திக் கொண்டு இருக்கும் சர்வதேச விண்வெளி மையம் (ISS) 2000ஆம் ஆண்டு நவம்பரில் நிறுவப்பட்டது. NASA, ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ், ஐரோப்பிய விண்வெளி அமைப்பு (ESA), ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியால் இது உருவாக்கப்பட்டது.
இதுவரை 20 நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் ISS-ல் பணியாற்றியுள்ளனர். ISS 2031ஆம் ஆண்டு வரை செயல்பட்டு பின்னர் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா தனது சொந்த திறன்களை பயன்படுத்தி “பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்” எனும் தனிப்பட்ட விண்வெளி மையத்தை அமைப்பது, தனி விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.