சிறுகதை

விடுமுறை – ராஜா செல்லமுத்து

விரிந்து பரந்த அந்த அலுவலகத்தில் 200 பேருக்கு மேல் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அலுவலகத்தில் அமுதினியும் ஒருத்தி. தலைக்கு மேலே கத்தி சுழல்வது போல, எப்போதும் தலைக்கு மேலே வேலை சுழன்று கொண்டே இருக்கும்.

திங்கள் முதல் சனி வரை வார விடுமுறை இல்லாமல் அலுவலகத்திற்கு வந்து ஆக வேண்டும். அப்படி வரவில்லை என்றால் அலுவலக மேலாளர் கேள்வி மேல் கேள்வி கேட்பார். தேவை இல்லாமல் விடுமுறை எடுப்பது தேவை இல்லாமல் அலுவலகத்திற்கு வராமல் இருப்பதெல்லாம் மேலாளருக்கு சுத்தமாகப் பிடிக்காது. ரொம்பவே கறார் பேர் வழியாக இருப்பார்.

இதனால் அலுவலகத்தில் உள்ளவர்கள் அத்தனை பேரும் சரியான நேரத்தில் சரியான நாட்களில் வந்து விடுவார்கள்.

காலதாமதம், வேலையில் கவனக் குறைவு இருந்தால் கூட அவருக்குப் பிடிக்காது. கடுமையாக நடந்து கொள்வார்.

அதனால் அந்த அலுவலக ஊழியர்கள் எல்லாம் தங்களுடைய வேலைகளை சரியாக செய்து கொண்டிருப்பார்கள்.

மொத்த ஊழியர்களில் ஒவ்வொருவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் விருப்பப்படியே என்று அவர்களின் எண்ணத்திற்குத் தகுந்த மாதிரி விட்டுவிட்டார் மேலாளர்.

அதனால் அலுவலர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ? எந்தத் தேதியில் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்களோ? அந்த தேதியில் அந்த நாளில் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் அமுதினிக்கு மட்டும் ஞாயிறு விடுமுறை என்பதால் ஒவ்வொரு வாரமும் எப்போது ஞாயிற்றுக்கிழமை வரும் என்று அவர் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பாள்.

அந்த ஞாயிறு அவளுக்கு கொண்டாட்டத்தின் உச்சியில் பாேய் உட்காரும். அந்த ஞாயிற்றுக்கிழமையில் அவர் எண்ணிலடங்காத எண்ணங்களைத் தன் மனதுக்குள் தேக்கி வைத்திருப்பாள்.

ஆறு நாட்கள் அயராது வேலை செய்து ஏழாவது நாள் அமரும் போது, அவளுக்கு உச்சந்தலையில் பூப்பூத்து உள்ளங்களில் வேர்விடும் அந்த அளவுக்கு அந்த ஒரு நாள் விடுமுறை அவளுக்கு அமிர்தமாக இருந்தது.

ஆனால் சில நாட்களில் அவள் எடுக்கும் விடுமுறை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

முன்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்து வந்தவள், இப்போது அவளுக்கு சனிக்கிழமையே வயிற்று வலி வந்துவிடும். சனி ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்வாள்.

அப்படி சனிக்கிழமை தவறிவிட்டது என்றால் ஞாயிறு விடுமுறை திங்கட்கிழமை அவளுக்கு வயிற்றுவலி வந்து விடும். அதனால் திங்கட்கிழமையும் சேர்த்து விடுமுறை எடுத்துக் கொள்வாள்.

இது தெரியாத மேலாளர் அமுதினிக்கு சனிக்கிழமை வயிற்றுவலி வந்தால், அவளுக்கு சனி ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமையோடு திங்கட்கிழமையும் அவளுக்கு வயிற்றுவலி வந்தால், ஞாயிறு திங்கள் என்று இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

இப்படி ரொம்ப அறிவுப்பூர்வமாகவும் புத்திசாலித்தனமாக யோசித்து அவள் விடுமுறை எடுத்தாள்.

இது முதலில் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு தெரியாமல் இருந்தது.

ஏதோ ஒரு வாரம் இரண்டு வாரம் என்று இல்லாமல் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் அவளுக்கு சனிக்கிழமையை வயித்து வலி வந்துவிடும். அல்லது திங்கட்கிழமை வந்து விடும் என்று அலுவலக ஊழியர்கள் பேசிக் கொள்வார்கள்.

இதைப் பற்றி யாருக்கும் தெரியாது நாம் அறிவாளி இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று வழக்கம்போல சனிக்கிழமை வெளிவந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுப்பாள்.

தவறினால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை யோடு திங்கட்கிழமை வயிற்று வலி வந்துவிடும். இப்படி போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நாள் வெள்ளிக்கிழமை வேலை முடித்து.

சனிக்கிழமை ஆன போது அவள் வயிற்று வலி என்று மேலாளருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.

அப்போது மேலாளர் சிரித்துக் கொண்டே அவளிடம் கேட்டார்.

‘என்ன அமுதினி சனிக்கிழமை வயிற்று வலி வந்தா ஞாயிற்றுக்கிழமை லீவு ரெண்டு நாள் உனக்கு கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை முடிஞ்சு திங்கட்கிழமை உனக்கு வயித்த வலி வந்தா ரெண்டு நாள் லீவு கிடைக்கும். எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு கேனையன் மாதிரி தெரியுதா? அடுத்த வாரத்திலிருந்து சனிக்கிழமை வயித்த வலி வந்துச்சு அவ்வளவுதான்’ என்று கடுகடுத்தார். ‘சனிக்கிழமை வேலைக்கு வரல அப்புறம் உன்னோட வேலைக்கு வேட்டு வச்சுருவேன்’ என்றார்.

‘அய்யோ அப்படிலாம் சொல்லாதீங்க சார். எனக்கு உண்மையிலே வயித்த வலி தான் வந்துச்சு. அதை சொல்லி தான் லீவ் எடுத்தேன். அப்படிலாம் பண்ணிடாதிங்க’ என்றவள், ‘ஞாயிற்றுக்கிழமை நான் வர்றேன் சார். எனக்கு வயித்து வலி வந்தாலும் பரவாயில்லை வயித்தில துணிய கட்டிட்டு கூட நான் வேலை செய்வேன். ஏன்னா எனக்கு வேலை தான் முக்கியம் சார். எனக்கு ஞாயிற்றுக்கிழமை கூட லீவு வேண்டாம்’ என்று சொன்னாள்.

மேலாளர் சிரித்துக் கொண்டே ‘ஆபீஸ் வந்து சேருங்க’ என்று போனை கட் செய்தார்.

ஆனால் அமுதினிக்கு அந்த வாரம் சனிக்கிழமையும் வயிற்றுவலி வரவில்லை. திங்கட்கிழமையும் வயிற்றுவலி வரவில்லை.

மாறாக அவள் அந்த ஞாயிற்றுக் கிழமையில் கூட அலுவலகத்திற்கு வந்தாள்.

ஏனென்றால் அவள் தலைக்கு மேலே கத்தி சுழன்று கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.