சென்னை, செப்.15-
விடுபட்ட பெண்கள் அனைவருக்கும் ஓரிரு மாதங்களில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று, 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர், 4 கிராம் தங்கத்துடன் பீரோ, கட்டில் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
இங்கே வந்த ஒரு ஜோடியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது மாப்பிள்ளை காதல் திருமணம் என்று கூறினார். காதல் திருமணத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் எனக்கும் காதல் திருமணம்தான். பல்வேறு பிரச்சினைகளை சமாளித்துதான் காதல் திருமணங்கள் நடக்கிறது. இங்கும் நிறைய பேர் காதல் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் அனைவரும் நன்றாக படித்துள்ளார்கள். 60 ஆண்டுகளுக்கு முன்பு இதெல்லாம் சாத்தியம் இல்லை. அப்போதெல்லாம் பெயருக்கு பின்னால் சமுதாய பெயரும், சாதி பெயரும் தான் இருக்கும். ஆனால், இப்போது அவர்கள் படித்த படிப்பு மட்டுமே இருக்கிறது. இதற்கு காரணம் பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றவர்கள்தான்.
அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக தமிழ்நாடு அரசு விளங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் விடுபட்டுபோன அனைத்து பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக வழங்கப்படும். இதுபோன்ற திட்டங்களால் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை காட்டிலும் 11.19 சதவீத வளர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது. 4½ ஆண்டுகளில் 3,700 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
கோவில் நிதியில் ஏன் கல்லூரியை திறக்கிறீர்கள்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றார்கள். மக்களின் பணம் மக்களுக்குதான் சொந்தம் என்று அவருடைய வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்கள்.
அறநிலையத்துறை சார்பில் எப்படி திருமணம் செய்து வைப்பீர்கள் என அவர் கேட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தி.மு.க.வின் சாதனைகள் அவரின் கண்களை உறுத்திக்கொண்டிருக்கிறது. திருமணமான உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
![]()





