செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதத்திற்கு இடைநீக்கம்

Makkal Kural Official

கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, டிச. 09–

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசியிருந்தார். இது கூட்டணி கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

இதனையடுத்து கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜூனாவை நீக்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலத்திற்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:–

“கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து கடந்த 7ஆம் தேதி கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

6 மாதத்திற்கு நீக்கம்

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் 3 பேர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *