செய்திகள்

விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரை, ஏப்.21–
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது. தசாவதார நிகழ்ச்சியில் இன்று காலை கள்ளழகர் மோகினி அவதாரத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
மதுரையில் அழகர்கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் துர்வாச முனிவரால் தவளையாக சாபம் பெற்ற மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி தேனூர் மண்டபம் அருகே வைகை ஆற்றில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து வண்டியூர் அனுமார் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதன்பிறகு கள்ளழகர் மதிச்சியத்தில் உள்ள ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு நேற்று இரவு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமராயர் மண்டபத்தின் முன்பு கூடி இருந்து தசாவதார நிகழ்ச்சியை பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்தனர்.
தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவை, மச்சவதாரம், கூர்ம அவதாரம், வாமண அவதாரம், ராமவதாரம், கிருஷ்ண அவதாரம் இன்று காலை மோகினி அவதாரம் போன்ற அவதாரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையடுத்து மதியம் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்திலேயே கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் காட்சியளித்தார்.
இதையடுத்து அனந்த ராயர் பல்லக்கில் ஒவ்வொரு மண்டகப் படியாக எழுந்தருளி மதுரை தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில் இன்று இரவு எழுந்தருளுகிறார். அங்கிருந்து நாளை அதிகாலை 3 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் அழகர்கோவில் மலைக்கு திரும்புகிறார். நாளை மறுநாள் (23–ந் தேதி) அழகர்கோவில் மலைக்கு கள்ளழகர் சென்றடைகிறார். அழகர் கோவில் மலையில் இருந்து மதுரை வண்டியூர் வரை 448 மண்டகப்படிகளில் எழுந்தருளி வந்த கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். கள்ளழகர் நாளை மறுநாள் காலையில் அழகர்கோவில் மலைக்கு போய் சேருவதையொட்டி சித்திரை திருவிழா முடிவடையும் நிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *