செய்திகள்

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 45வது திருவள்ளுவர் சிலை திறப்பு

Spread the love

சென்னை, ஜூன். 19–

விஜிபி உலக தமிழ் சங்கத்தின் டி.ஜெ.எஸ். 45வது திருவள்ளுவர் சிலை கும்முடிபூண்டி கல்விக்குழுமம் வளாகத்தில் திறக்கப்பட்டது. நீதிபதி டி.என். வள்ளிநாயகம் தலைமையில், விஜிபி குழுமங்களின் தலைவரும் விஜிபி உலகத் தமிழ் சங்கம் நிறுவனருமான வி.ஜி.சந்தோஷம் இச்சிலையை திறந்து வைத்தார்.

கல்லூரியின் தலைவர் டி.ஜே. கோவிந்தராஜன் வரவேற்றார். அப்போது அவர் பேசுகையில், கடவுள் மனிதனுக்கு அறிவுரை கூறியது பகவத்கீதை, மனிதன் கடவுளை வாழ்த்திப் போற்றியது திருவாசகம், மனிதனுக்கு மனிதன் அறிவுரை கூறியது திருக்குறள். அந்த திருக்குறளை தந்தவர் தான் திருவள்ளுவர் என்றார்.

நீதிபதி வள்ளிநாயகம் பேசுகையில், குறள் மூன்று எழுத்து, விஜிபி மூன்றெழுத்து, டி.ஜே.எஸ். மூன்று எழுத்து என்று வர்ணித்தார்.

வி.ஜி. சந்தோஷம் பேசுகையில், 60 ஆண்டுகளுக்கு முன்பு கும்மிடிப்பூண்டியில் நான் சைக்கிளில் சென்று தவணைமுறையில் ரேடியோ, கடிகாரம் போன்றவற்றை விற்ற பகுதியில் இன்று விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 45வது திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அய்யன் திருவள்ளுவரை அதிகம் நேசிப்பதால் நாங்கள் திருவள்ளுவர் சிலையை இந்தியா மற்றும் உலக நாடுகளில் பல்வேறு இடங்களில் அமைத்து வருகிறோம். தமிழ் என்றால் திருவள்ளுவர். வள்ளுவர் இல்லையேல் தமிழின் பெருமை இல்லை. தமிழின் பெருமையும் வள்ளுவராலேயே ஓங்கி ஒலிக்கப்படுகிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் தினம் தினம் ஒரு குறளைப் படிக்க வேண்டும். அதன்படி வாழ்வில் நடக்க வேண்டும். குறள்போல் உயர்ந்து வாழ வாழ்த்துகிறேன் என்றார்.

இவ்விழாவில் டி.ஜெ.எஸ். கல்வி குழும நிறுவனர் டி.ஜெ. ஆறுமுகம், உதவித் தலைவர் டி.ஜே. தேசமுத்து, தாளாளர் ஆ.பழனி, முதல்வர் பா. ஞானப்பிரகாசம், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 46வது மற்றும் 47வது திருவள்ளுவர் சிலை மதுரை காமராஜ் பல்கலை கழகத்திலும், விருதுநகரிலும் இம்மாதம் 21ம் தேதி நிறுவப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *