செய்திகள்

விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

Makkal Kural Official

சென்னை, அக். 9–

சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில் தவெக தலைவர் விஜய் வீடு அமைந்துள்ளது. அவருக்கு மத்திய அரசு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் விஜய் வீட்டிற்குள், மன நலம் பாதித்த நபர் ஒருவர் நுழைந்தார். இதனால், ஒய் பிரிவு பாதுகாப்பில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நொய்டாவில் இருந்து வந்த சிஆர்பிஎப் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதனடிப்படையில், விடிய விடிய வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். முடிவில், அது புரளி என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் 28–ந் தேதி விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், 2வது முறையாக மிரட்டல் வந்துள்ளது. கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தால் விஜய் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *