செய்திகள்

விஜய் பாஜகவின் ‘சி’ டீம்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

Makkal Kural Official

புதுக்கோட்டை, அக். 28- தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் ‘சி’ டீம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் பேசுகையில், “பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்.

மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம். எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போவது பெண்கள். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே என் அரசியல் குறிக்கோள்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது பேசிய அவர், “விஜய் பாஜகவின் ‘ஏ டீமும்’ இல்லை, ‘பி டீமும்’ இல்லை. அவர் பாஜகவின் ‘சி டீம்’. நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாடு ஒரு பிரம்மாண்ட சினிமா மாநாடு. அதிமுக பற்றி பேசினால் எடுபடாது என்பதால் அந்தக்கட்சி பற்றி விஜய் பேசவில்லை. பாஜகவை வலுப்படுத்தும் வகையில், அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள்.

விக்கிரவாண்டியில் நேற்று விஜய் கூட்டிய கூட்டம் போன்று ஏற்கனவே திமுக நிறைய கூட்டம் நடத்தி உள்ளது. திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. சிறுபான்மையினர் நலன் மற்றும் கொள்கைக்காக 2 முறை ஆட்சியை இழந்த கட்சி திமுக. திராவிடம் தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாத சொல். இளைஞர்கள் நம்பும் ஒரு இயக்கமாக திமுக உள்ளது.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *