விழுப்புரம், அக்.15-–
விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள விஜய் கட்சி மாநாட்டுக்கு மேலும் 5 கேள்விகள் கேட்டு போலீசார், நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டுக்காக விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் முதலில் 33 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியிருந்தனர். பின்னர் அந்த நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிபந்தனைகளை பின்பற்றி மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகளில் அக்கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மேடை அமைக்கும் பணி, தடுப்புகள் அமைக்கும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் அக்கட்சியினர் அயராது உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்று வழங்கப்பட்டது. அதில் 5 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-–
தொடர் மழை வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மாநாடு அன்று மழை பெய்தால் லட்சக்கணக்கில் வரும் தொண்டர்களுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள், வாகனம் நிறுத்துமிடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து கொடுக்கவில்லை, லட்சக்கணக்கில் தொண்டர்கள் வந்தால் அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை உடனடியாக தேர்வு செய்து அதை சரிசெய்து அதற்கான வரைபடங்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும், மாவட்ட வாரியாக எத்தனை வாகனங்கள், என்னென்ன வகையான வாகனங்கள் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே காவல்துறைக்கு பட்டியல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 நிபந்தனைகளை கேள்வியாக தொடுத்து அந்த நோட்டீசை விக்கிரவாண்டி போலீஸ் நிலைய சப்-–இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தமிழக வெற்றிக்கழக விக்கிரவாண்டி ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷிடம் வழங்கியுள்ளார்.
தற்போது 2-வது முறையாக மேலும் 5 கேள்விகளை கேட்டு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.