லாரி மீது ஏறி நடனமாடிய அஜித் ரசிகர் தவறி விழுந்து மரணம்
திரையரங்குகளில் ரசிகர்கள் மோதல்; போலீஸ் தடியடி
சென்னை, ஜன. 11–
அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய திரைப்படங்கள் இன்று வெளியாகின.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். ஜில்லா- வீரம் படங்கள் வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் அஜித் -விஜய் நடித்த திரைப்படங்கள் இன்று வெளியாகின. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழில் வேறு எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில், துணிவு- வாரிசு ஆகிய படங்களுக்கான நேரடி போட்டியாக அமைந்தது. இதில், துணிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி நள்ளிரவு ஒரு மணிக்கும், வாரிசு படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கும் தொடங்கியது.
ஒரே நாளில் இரு முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்களும் வெளியானதால் பல்வேறு திரையரங்கங்களிலும் விஜய், அஜித் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இரு படங்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு பேனர்கள், தோரணங்களை கட்டி ரசிகர்கள் வரவேற்றனர்.
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், நேற்று இரவு முதலே அஜித் ரசிகர்கள் திரையரங்கில் கூட தொடங்கினர். முதல்காட்சியை வரவேற்கும் விதமாக அஜித்தின் பேனர்களுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்தும், பட்டாசு, வாணவெடிகள் வெடித்தும் உற்சாகம் காட்டினர்.
சென்னையில்
போலீஸ் தடியடி
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் குவிந்த சில ரசிகர்கள் தளபதி என விஜய் ரசிகர்களும் தல, ஏ.கே என அஜித் ரசிகர்களும் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். ஒருகட்டத்தில், திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித், விஜய் ஆகியோரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் இருதரப்பு ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திரையரங்கில் அசாதாரண சூழல் நிலவியதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
லாரியில் ஏறி நடனம்;
அஜித் ரசிகர் மரணம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் துணிவுப் படம் நள்ளிரவு ஒரு மணிக்கும், வாரிசுத் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு ரசிகர்களும் அதிகளவில் திரண்டனர். நேற்று இரவு வந்திருந்த நடிகர் அஜித்தின் ரசிகர், பிற ரசிகர்களோடு ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு இருந்தார். கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு இருந்த சென்னை சிந்தாகிரிபேட்டை ரிச்சி தெருவைச் சேர்ந்த 19 வயதான பரத் குமார், அந்த வழியாக சாலையில் சென்ற கண்டெய்னர் லாரி மீது ஏறி ஆடியுள்ளார்.
நடனமாடியவாறே கண்டெய்னர் லாரியில் இருந்து கீழே குதித்த பரத் குமார் தவறி விழுந்ததில், அவருக்கு முதுகில் அடிப்பட்டது. உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பரத் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரத் குமார் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் பார்க்க வந்த இளைஞரின் திடீர் மரணம் அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையில் தியேட்டர்
கண்ணாடி உடைப்பு
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள ஜெயம் திரையரங்கில் துணிவு படம் வெளியீட்டுக்காக ரசிகர்களால் டி.ஜே. இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து திரையரங்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டி.ஜே. நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது. இதை அடுத்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
இதேபோல், கோவை மாநகர் பூ மார்க்கெட் வீதியில் அமைந்துள்ள அர்ச்சனா – தர்சனா திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட இருந்தது. இதனையொட்டி நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர் முன்பு திரண்டிருந்தனர். காவல்துறையினர் கூட்டத்தை தடியடி நடத்தி கட்டுப்படுத்த முயன்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் தியேட்டர் கதவை உடைத்துவிட்டு திரையரங்குக்குள் நுழைந்தனர். இந்த நெரிசலில் முகப்பில் இருந்த கண்ணாடியும் படிக்கட்டு கம்பிகளும் உடைக்கப்பட்டன. காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய தடியடியிலும் கூட்ட நெரிசலிலும் சில ரசிகர்களுக்கு மண்டை உடைந்து ரத்த காயமும் ஏற்பட்டது.
கட் அவுட்டுக்கு
பால் அபிஷேகம்
நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் மயிலாடுதுறையில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் தியேட்டர் வாசலில் மண்டியிட்டு வந்து, விஜய்யின் ஆளுயர கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து கொண்டாடினர்.