செய்திகள்

விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது : ஜனாதிபதியிடம் இருந்து பிரேமலதா பெற்றுக்கொண்டார்

புதுடெல்லி, மே.10-

விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதை, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். அதனை விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான பிரேமலதா பெற்றுக்கொண்டார்.

கலை, இலக்கியம், அறிவியல், வர்த்தகம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். பாரத ரத்னா விருதுக்கு அடுத்த உயரிய விருதான இந்த பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய 3 நிலைகளில் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகள் கடந்த குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டன. இதில் பத்ம விபூஷண் விருதுகள் 5 பேருக்கும், பத்ம பூஷண் விருதுகள் 17 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருதுகள் 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், உள்ளிட்ட 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பாடகி உஷா உதூப் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதுகளும், மற்ற சிலருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி வழங்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு இதனை வழங்கினார்.

இந்த நிலையில் 2-ம் கட்ட விருது வழங்கும் விழா துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.

முதலாவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா பாலி, பத்ம விபூஷண் விருதை பெற்றார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவியும் அதே விருதை பெற்றார்.

பின்னர் நடிகர் விஜயகாந்துக்கு அறிவிக்கப் பட்ட பத்ம பூஷண் விருதை அவருடைய மனைவியும், தே.மு.தி.க. பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார். விருதை வாங்கிய அவர் அதனை மேலே தூக்கி, விஜயகாந்துக்கு சமர்ப்பிப்பது போல காட்டினார். இந்த செயலை அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியோடு பார்த்தனர். இதேபோல் முன்னாள் மத்திய மந்திரி ஓ.ராஜகோபால், மறைந்த தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவிக்காக அவருடைய சகோதரி பாசியா ரபீக் உள்ளிட்ட மேலும் சிலரும் பத்ம பூஷண் விருதை பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த வள்ளி கும்மியாட்ட கலைஞர் எம்.பத்ரப்பன், டாக்டர் நாச்சியார், விளையாட்டு வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருது பெற்றனர்.

விழாவில் கர்நாடகத்தைச் சேர்ந்த இரு கை மற்றும் கால்களையும் இழந்த சமூக சேவகர் கே.எஸ்.ராஜண்ணா, பத்ம ஸ்ரீ விருதை பெற வந்தபோது சில நிமிடங்கள் பிரதமரின் கரங்களை தழுவி வணங்கினார். பதிலுக்கு பிரதமர் சிரம் தாழ்ந்தார். இது மிகவும் நெகிழ்ச்சிக்கரமாக இருந்தது.

நிகழ்ச்சியில் விருதாளர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

நடிகர் சிரஞ்சீவியுடன் அவருடைய மனைவி மற்றும் மகன் ராம் சரண் ஆகியோர் பங்கேற்றனர்.

பிரேமலதா விஜயகாந்துடன் அவருடைய தம்பி சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *