சிறுகதை

விசை ஈட்டி | காசாங்காடு வீ.காசிநாதன்

தனது சொந்த முயற்சியில் விசை ஈட்டி என்ற ஒருவகை ஈட்டியை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார் முகமது. அதை பலவகைச் சோதனைகளுக்குப் பின் வெற்றிகரமாக எய்தினார். ஈட்டியின் மையத்தில் குழாய் போன்ற ஒருபகுதி அதன் மொத்த நீளத்தில் நான்கில் மூன்று பகுதிவரை நீண்டிருக்கும். அதில் வெடிமருந்து நிரப்பப்பட்டு அதன் மூலம் வேகமாக அதிகத் தொலைவுக்கு அனுப்பும் வகையில் தயாரித்து இருந்தார். அதைச் செலுத்த விசைப்பலகை ஒன்றையும் வடிவமைத்து இருந்தார்.

ஈட்டியின் மையக் குழாய்ப் பகுதியில் வைக்கப்படும் வெடிமருந்தின் அளவு, அதன் எரிசக்தித் திறன் மற்றும் விசைப்பலகையின் கோணம், அதன் உயரம் ஆகியவற்றைக் கொண்டு தூரத்தில் வரும் எதிரி நாட்டுப்படையை இதன் மூலம் துல்லியமாக தாக்க இயலும். குதிரைப்படை, யானைப்படை மற்றும் கடல்வழி பாய்மரக் கப்பல்களில் சுந்தரபுரியை தாக்க முயல்பவர்களின் இலக்கை தாக்கி அழிக்க முடியும்.

இந்த விசை ஈட்டிகளை வைத்திருப்பவர்கள் மிக வலிமையானவர்களாக அந்த காலத்தில் கருதப்பட்டனர். இந்தக் கண்டுபிடிப்புதான் முகமதுவை சுந்தரபுரியின் போர்ப்படைத் தலைவனாக்க உதவியது. சுந்தரபுரியைத் தவிர வேறு யாரிடமும் இந்த விசை ஈட்டித் தயாரிப்பு தொழில் நுட்பம் இல்லை.

*

தீவின் மையப்பகுதியில் தாதுக்கள் நிரம்பிய பெரிய நிலப்பரப்பு – அவரது தந்தை சுந்தரத்தேவன் காலத்தில் வேட்டையாடச் சென்றபோது கண்டறியப்பட்டது. தாதுமண் உள்ள நிலப்பரப்பை கட்டிக்காக்க தனது வலிமை மிக்க படைப்பிரிவை இப்பகுதியில் நிரந்தரமாக்கினார். அவரது பெயரால் சுந்தரபுரி என்று அழைக்கப்பட்டது.

பாதுகாப்பு பணிக்கு அதிக ஆட்கள் தேவைப்பட்டதால் சொந்த நாட்டினரை அதில் பணியமர்த்தி தாதுக்கள் நிரம்பிய நிலப்பாரப்பை சுற்றிலும் சிறிய கிராமங்களை ஏற்படுத்தி அவற்றை ஒருங்கிணைக்க ஒரு வட்டவடிவச் சாலை வசதியை அமைத்து கொடுத்தார்.

சத்தியதேவன் ஆட்சிப் பொறுப்பு ஏற்றபின் அங்குள்ள மற்ற கிராமங்களையும் இந்த வட்டவடிவச் சாலையுடன் இணைத்தார். நிர்வாக வசதிக்காக 20 கிராமங்களை ஒரு குழுமம் என்றும் என்றும் ஐந்து குழுமம் ஒருதொகுதி என 10 தொகுதிகளாக பிரித்தார்.

வட்டவடிவ பிரதான சாலைகளை ஒட்டி வளைந்து நெளிந்து செல்லும் நதிகள், ஏரிகள் நிரம்ப இருந்தன. சமவெளியாக இருந்த இடங்களில் மரவள்ளிக் கிழங்குத் தோட்டம், தென்னை மரத் தோப்புகள், கடுகுச்செடிகள், கரும்பு வயல்கள், சோளக்காடுகள், குறுந்தானியங்கள், பழம் மற்றும் காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டது. அவற்றில் இயற்கை விவசாயம். அதற்கு வீட்டு விலங்குகளின் பயன்பாடு. தீவு முழுவதும் பச்சைநிற போர்வை விரித்ததைப்போல் பசுமை. இத்தீவின் பசுமை மனதைக் கொள்ளை கொள்ளும். கொள்ளை அழகு.

சத்தியதேவன் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தீவு முழுவதும் அவரது நிர்வாகிகளுடன் பயணித்து தேவையான மாற்றங்களைச் செய்யக் கட்டளை யிடுவார். ஒருமுறை தீவைச் சுற்றிவந்தால் அநேக மாற்றங்களைக் கூறிவிடுவார். சத்தியதேவனுடன் பணியாற்றுவதே ஒருவகை புதிய அனுபவம் மனிதர் எப்படியெல்லாம் யோசிக்கின்றார்? என சக அமைச்சர்கள் ஆச்சரியப்படுவார்கள். வேகம், விவேகம் அரவணைப்பு. உடன் இருப்பவர்களுடன் ஆலோசனை கேட்பது, அந்த யோசனை சரியெனப் பட்டால் அவர்களை உற்சாகப்படுத்தி செயல்படுத்துவது அவரது சிறப்பான குணம்.

தொலைநோக்குப் பார்வையும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றங்களையும் கருத்தில்கொண்டு எந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்? அது சாத்தியப்படுமா? என அனைத்து நடைமுறைச் சிக்கலையும் கவனத்தில் கொண்டு திட்டங்களை வகுக்கக் கூடியவர். திட்டத்தை செயல்படுத்த தகுந்த ஆலோசனைகளையும் கூறுவார்.

அவற்றை தொகுதி, குழுமம் மற்றும் கிராம நிர்வாகிகள் செயல்படுத்துவார்கள். தீவின் விளிம்புகளில் மீன்பிடித்தல் விவசாயத்தை அடுத்து முக்கிய தொழில்.

கிராமங்களை ஒன்றிணைத்த சாலைகளில் மாடுகள், குதிரைகள், கழுதைகள், யானைகள் போக்குவரத்திலும் சரக்குகளை கையாளவும் பயன்படுத்தப்பட்டன.

கிராமங்களை நிர்மானித்து அதில் வேலை செய்ய கைதிகள், வெளி நாட்டவர்களை பெரிதும் பயன்படுத்தினார். இதற்கு வேண்டிய பெரும்நிதி – போர்க்கருவி ஏற்றுமதி விற்பனை மூலம் தொடர்ந்து வந்தன.

ஐரோப்பாவின் பிரெஞ்சு நாட்டில் எப்படி திராட்சைத் தோட்டங்களும் “கோனியாக்” என்று அழைப்பபடும் பிராந்தி உற்பத்தித் தொழிலும் செழிப்படைந்ததோ அதேபோல் சுந்தரபுரியின் போர் கருவிகள் தயாரிப்பும் விரிவடைந்து அதன் மூலம் பொருளும் ஈட்டியது.

சுந்தரபுரியின் வளர்ச்சிக்கும் தனது புகழ் உயர்ந்ததற்கும் காரணமான முகமதுவுக்கு மிக உயர்ந்த பரிசு கொடுக்க வேண்டும் என்று சத்தியதேவன் விரும்பினார்.

அது என்ன பரிசு என்ற கேள்விக்கு விடை தரும் காலத்திற்காக அவர் காத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *