செய்திகள் நாடும் நடப்பும்

விசா தேவையில்லை: இந்தியர்களுக்கு மலேசியா சிவப்பு கம்பள வரவேற்பு


ஆர். முத்துக்குமார்


உலக நாடுகள் பல்வேறு பொருளாதார சிக்கல்களிலிருந்து மீண்டு எழுந்து நடைபோட துவங்கி வரும் இக்கட்டத்தில் சுற்றுலா பொருளாதாரத்தின் அவசியத்தை உணர்ந்து பல மாற்றங்களை செய்து வருகிறார்கள்.

அதில் சீனா சமீபத்தில் அறிவித்த விசா இல்லா வரவேற்பு நல்ல பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் மற்றும் அமெரிக்காவில் விடுமுறை நாட்கள் என்பது டிசம்பர் மாதத்தின் இறுதி 15 நாட்களாகும். பலர் சுற்றுலா பயணங்களுக்கு ரம்மியமான ஊர்களுகக்கு சென்று குடும்பத்தாருடன் குதூகலமாக இருப்பது வாடிக்கை.

விமான நிறுவனங்கள் முதல் உல்லாச ஓட்டல்கள் வரை எல்லோருமே சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்குமா? என ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய மிகப்பெரிய பாதிப்பு – விமான நிறுவனங்களுக்கும் ஓட்டல் துறைக்கும் தான். வீடியோ கான்பிரன்சிங் முறை எல்லோராலும் கையாளப்படக் கூடிய ஒன்றாக வந்து விட்ட நிலையில் சுற்றுலா துறையின் இந்த இரு பெரிய தூண்கள் மீண்டு எழ தவித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இவற்றுடன் உக்ரைன், இஸ்ரேல் சமாச்சாரங்களால் பெட்ரோல், டீசல் விலைகளும் அமெரிக்க டாலரின் விலையும் அதிகரித்து உள்ள நிலையில் விமான டிக்கெட்டுகளின் விலை உச்சத்திலேயே இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சுற்றுலா துறைக்கு வேகம் தர அரசுகளும் களம் இறங்கி விட்டது.

சமீபத்தில் சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா மக்களுக்கு விசாஇன்றி வர புது அறிவிப்பை தந்துள்ளது.

அதன் பயனாக விசாவுக்கு பணம் கட்டி காத்திருந்து விசா பெறாமல் நினைத்த நாளில் குறைந்த விலை டிக்கெட் கிடைக்கும் நேரத்தில் உடனே பயணித்து சீனாவில் 15 நாட்களுக்கு விசாஇன்றி பயணிக்கலாம்.

இது சீனாவுக்கு பல வகைகளில் பலன் தரும். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளிலிருந்து சீனாவுக்கு தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு தேவையான தொழில்நுட்ப கருவிகளை தயாரித்துத் தர ஆர்டர் கொடுக்க எளிதில் செல்ல முடியும்!

மலேசியாவிலும் வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகள், இந்திய நிறுவனங்களின் பிராந்திய அலுவலகங்கள் இருப்பதால் தங்களது தேவைகளுக்காக மலேசிய பணியாட்களை சீனாவுக்கு வியாபார நிமித்தமாக சென்று வர அனுப்பும் வசதியையும் பெறுவார்கள்.

சீனாவின் இந்த முயற்சியை போல் மலேஷியாவும் இந்தியர்களுக்கு விசா இன்றி வந்து செல்ல கொள்கை தளர்வு முடிவை அறிவித்துள்ளார்கள். மலேசியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கூடுதல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதன் மூலம் அதிக அளவில் அந்நியச் செலாவணி வருவாயினைப் பெற முடியும்.

இதை மனதில் கொண்டே சீனா மற்றும் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் மலேசியாவில் தங்கி சுற்றுலா இடங்களை பார்வையிட அனுமதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை வரும் டிசம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *