சிறுகதை

விசாரணை | ஆவடி ரமேஷ்குமார்

நண்பர் அருணாச்சலம் சொன்ன செய்தியை கேட்டு முகம் சுளித்தார் சத்தியமூர்த்தி.

அருணாச்சலம் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். அதனால் அந்த செய்தியை நம்பாமல் இருக்க முடியவில்லை. செய்தியை உறுதி செய்து கொள்ள கல்யாண தரகர் கிருஷ்ணசாமியை போனில் தொடர்பு கொண்டார் சத்தியமூர்த்தி.

” கிருஷ்ணசாமி, உங்க மூலமாக போன வாரம் என் மகள் ஆனந்தியை கிருஷ்ணகிரியிலிருந்து வந்து பெண் பார்த்துட்டு போனாங்களே…அவங்களைப்பத்தி…. அதாவது பையனோட அப்பாவைப்பத்தி் ஒரு முகம் சுளிக்கிற மாதிரியான செய்தி ஒன்னை என் கிருஷ்ணகிரி நண்பர் அருணாச்சலம் சொன்னார்”

” என்ன செய்திங்கய்யா, சொல்லுங்க”

” வந்துட்டுப்போன மாப்பிள்ளை பையனோட அப்பாவுக்கு ரகசியமா ஒரு சின்னவீடு இருக்குதாமே…. அது உண்மையான தகவலானு எப்படி தெரிஞ்சுக்கிறது? உங்களுக்கு இந்த நியூஸ் தெரியுமா?”

” இந்த நியூஸ் எனக்கு தெரியாதுங்கய்யா. ஆனா சத்தியமா இது தப்பான நியூஸ்ங்கய்யா. அவர் தங்கமான மனுஷர்ங்க. அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்.”

” இந்த நியூஸ் உண்மையா இருந்தா என்ன பண்றது?”

” அய்யா…நீங்க வேணா ரகசியமா ஆள் வச்சு, அந்த ஆளை கிருஷ்ணகிரிக்கு அனுப்பி உண்மையை விசாரிச்சிட்டு வரச்சொல்லுங்க.”

” ஓ.கே.கிருஷ்ணசாமி.அதே மாதிரி செஞ்சு உண்மையை கண்டு பிடிக்கிறேன். இப்ப போனை வைக்கிறேன்”என்று

போனை வைத்தார் சத்தியமூர்த்தி.

அரை மணி நேரம் யோசித்தவர் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக தனது மைத்துனருக்கு போன் செய்தார்.

போனை எடுத்த மைத்துனரிடம் விஷயத்தை சொல்லி நாளையே கிருஷ்ணகிரிக்கு சென்று உண்மை நிலவரத்தைப் பற்றி அறிந்து வரும்படி கட்டளையிட்டார்.

பதிலுக்கு மைத்துனர் ” இது உண்மையா இருந்தா அப்பன் புத்தி பையனுக்கும் வராதுங்கிறது என்ன நிச்சயம்? ஆனந்தி நிலைமை மோசமாகிடும். கவலைப்படாதீங்க மச்சான். நாளைக்கு முதல் பஸ்ஸை பிடிச்சு போய் ஊர்ல எறங்கி எப்படியாவது தீர விசாரிச்சிட்டு வந்தர்றேன்” என்றார்.

மறுநாள் மாலை வந்தார் மைத்துனர்.

” வா முருகேசா… கிருஷ்ணகிரிக்கு போனியே.. என்னாச்சு விசாரணை? சின்ன வீடு வச்சிருக்கிறது உண்மையா?” ஆர்வமாக கேட்டார் சத்தியமூர்த்தி.

” மச்சான் இந்த சம்பந்தம் வேண்டாங்க. ஆனந்திக்கு நாம வேற இடம் பார்க்கலாம்”

” அப்படினா… மாப்பிள்ளை பையனோட அப்பாவுக்கு சின்னவீடு இருக்கிறதுங்கிறது உறுதியாயிடுச்சு. அப்படித்தானே முருகேசா..?”

” அது தப்பான தகவலுங்க மச்சான். அந்தாளு உத்தமரு. ஆனா வேற ஒரு புதுத்தகவல் கிடைச்சதுங்க. அதை சொல்ல என் நாக்கு கூசுது”

” அப்படி என்ன தகவலு?”

” மச்சான்… அது வந்து… உங்க நண்பர் செய்தியை மாத்தி சொல்லிட்டாருனு நெனைக்கிறேன். அதாவது பையனோட அம்மாவுக்கும் அந்த ஊர்ல இருக்கிற ஒரு பணக்கார பெரிய மனுஷருக்கும் பல வருஷமா தப்பான உறவு இருக்கிறதா என் காதுக்கு வந்ததுங்க. அந்தபணக்காரர் அந்தம்மாவுக்கு மாமன் முறையாகுதுனும் பேசிக்கிட்டாங்க”

செய்தியை கேட்ட சத்தியமூர்த்தி சிலையாகி போனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *