செய்திகள்

விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சி

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

டெல்லி, ஏப். 29–

வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தாமதப்படுத்த முயற்சிப்பதாக செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. 35 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்க முதன்மை சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறும் நிலையில், அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மே 6 ந்தேதிக்கு ஒத்திவைப்பு

அந்த பதில் மனுவில், ‘செந்தில் பாலாஜி விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைக்க மறுக்கிறார். அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் எம்.எல்.ஏ. பொறுப்பில் உள்ளதால் அதிகாரமிக்க நபராக செந்தில் பாலாஜி உள்ளார். இச்சமயத்தில் ஜாமீன் வழங்கினால், அது வழக்கு விசாரணையை பாதிக்கும். வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது, ‘இத்தனை நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், இன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அமலாக்கத்துறை நேற்றிரவு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இது சில நபர்களுக்குள் நடந்த கொடுக்கல் வாங்கல் விவகாரம். ஆனால் இதனை நிறுவனங்களுடன் சம்மந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர். மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதன் மூலம், வழக்கின் விசாரணையை தாமத்தப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது’ என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. வாதங்களை கேட்ட அமர்வு, மே 6-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *