செய்திகள் நாடும் நடப்பும்

விக்ரமாதித்தனுக்கு வேதாளம்: மனித குலத்திற்கு கொரோனா!

விடையை தேடும் பணியில் மருத்துவ உலகம்


கடந்த ஆண்டு பொங்கல் கொண்டாட நாடு தயாராகிய நேரத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட அனுமதி பெற்ற செய்தியுடன் அன்று முதல் முன்களப் பணியளர்களுக்கு போடத் துவங்கினோம்.

அன்றைய தினத்தில் மருத்துவர்கள், மருத்துவ சேவைத் துறை ஊழியர்கள், கொரோனா மருத்துவ சேவைகளுக்கு உதவிய அரசுப் பணியாளர்களுக்கும் குறிப்பாக காவல் துறை மற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட ஆரம்பித்து தற்போது ஒரே வருடத்தில் 150 கோடி தடுப்பூசியை செலுத்திய சாதனையை நாம் எட்டி விட்டோம்.

அதே வேகத்துடன் இன்று முதல் 3வது தவணையை போடும் பணிகளை துவங்கி விட்டோம். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்துள்ளார்.

இது வரலாற்று சிறப்பு மிகுந்த மைல்கல் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். சென்ற வார இறுதியில் கொல்கத்தாவில் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2 வது வளாகத்தை காணொலி கூட்டத்தின் போது துவக்கி வைத்து பேசும் போது அவர் சுட்டிகாட்டியது 15 முதல் 18 வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்குவதன் மூலம் நாம் 2022 ம் ஆண்டை தொடங்கியுள்ளோம்.

வெறும் 5 நாட்களில் 1½ கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 90% க்கும் அதிகமானோர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை பெற்றுள்ளனர்.

நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 150 கோடி டோஸ்கள் என்று வரலாற்று சிறப்பு மிகுந்த மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது.

புளிளி விவரங்களின் அடிப்படையில் இது ஒரு பெரிய எண் ஆகும். உலகின் பெரும்பாலான பெரிய நாடுகளுக்கு இது ஆச்சரியம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது 130 கோடிக்கு இந்திய மக்களின் திறனின் சின்னமாகும். தன்னம்பிக்கை மற்றும் சுயசார்பின் சின்னமாகும்.

பரிசோதனை முதல் தடுப்பூசி வரை இந்தியாவால் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பானது, கொரோனாவுக்கு எதிரான போரில் உலகத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரின் பாதுகாப்பான எதிர்காலத்துக்காக சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் அயராது திட்மிட்டு வருகிறோம்.

தடுப்பூசியை பெருவாரியான மக்கள் பெற்று விட்டாலும் தொற்று எண்ணிக்கை மீண்டும் 50 ஆயிரத்தை தாண்டியது ஏன்? என்ற அதிர்ச்சிக் கேள்வியும் எழுகிறது.

சிலருக்கு கொரோனா தொற்று தாக்கியும் 2 தவணை தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்ட பிறகும் மீண்டும் தாக்கியிருப்பது தெரிய வருகிறது.

உலக சுகாதார அமைப்பு ஒமிக்ரான் திரிபு வீரியம் குறைந்திருப்பதாக கூறி விட்டனர். அதாவது சமீபத்து 3 வது அலையில் பழைய கொரோனா தாக்கியவர்குளுக்கு பாதிப்பு ஓரளவு வீரியம் குறைந்திருப்பதால் உயிர்ச்சேதம் குறைவாகவே இருக்கிறது.

அது போன்றே ஒமிக்ரான் திரிவு தொற்று பாதிப்பு ஓரளவு கறைவாகவே தான் இருக்கிறது. மருத்துவ உலகின் பயமெல்லாம் அடுத்த திரிபு எங்கே? எப்படி உருவாகும்? அதன் வீரியம் தற்போதைய எதிர்ப்பு சக்திகளையெல்லாம் தாண்டி வலுவுடன் அவதரிக்கும் நிலையில் பாதிப்பு எப்படி இருக்கும்?

வேதாளம் கேள்வியை கேட்க பதில் தெரிந்து மவுனமாக இருந்தால் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறி விடும் சாபத்தை தந்துள்ளது. மவுனத்தை கலைத்து பதிலைச் சரியாக கூறி விட்டால் மாமன்னண் விக்கிரமாதித்தனிடம் இருந்து தப்பித்து மீண்டும் மரத்தில் ஏறிக் கொக்கரித்து சிரித்திடும் அல்லவா? அது போன்று தான் இன்று மனிதகுலத்தின் நிலமை!

கொரோனாவுக்கு பயமின்றி ஊரடங்கு வேண்டாம், மாஸ்க் போடாமல் இருப்பவர்களுக்கு பாதிப்படைந்து தவிக்கிறார்கள். பாரிப்பு தான் எதிர்ப்பு சக்தியை தந்துவிடும் என்று நம்பி தடுப்பூசியையும் போட்டுக் கொண்டால் புது திரிபு வெளிப்பட்டு நமக்கு சவால் விடுகிறது.

சில நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு, 3 வது தடுப்பூசி தவணை என்பது வந்து விடும். கூடவே அடுத்த கொரோனா அவதாரமும் வரலாம். இப்படியே போனால் மாணவர்களின் நிலை தான் கவலை தருகிறது.

விரைவில் இந்த தொடரும் சவாலை சந்திக்க நாம் புது யுக்தியை உருவாக்க யோசித்தாக வேண்டும். அதுவரை முகக்கவசமே நமது பாதுகாப்பு கவசமாகும், என்ன அப்படித்தானே!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *