சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவன் – நயன்தாரா இரட்டை குழந்தை பெற்ற விவகாரம்: விசாரணை நடத்த குழு அமைப்பு

சென்னை, அக்.13–

இயக்குநர்விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றதாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக அதனை விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வாரம் அறிவித்தார். அந்தப் பதிவில், “நயனும், நானும் அம்மா – அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. எங்களது பிரார்த்தனைகள், முன்னோரின் ஆசிர்வாதங்கள், நன்மைகள் எல்லாம் சேர்ந்து இரு குழந்தைகள் வடிவில் எங்களுக்கு கிடைத்துள்ளது. எங்களுடைய உயிர் மற்றும் உலகத்துக்கு உங்கள் அனைவருடைய ஆசிர்வாதங்களும் தேவை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் வாடகைத் தாய் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றினார்களா என்று ஊரக மருத்துவ இயக்குநரகம் மூலம் விளக்கம் பெறப்படும்” எனத் தெரிவித்தார்.

3 பேர் குழு

இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணையை துவங்கியுள்ளது.

முதற்கட்டமாக மருத்துவமனையை விசாரிக்கவும், தேவைப்பட்டால் விக்னேஷ், நயன்தாரா தம்பதியிடம் விசாரணையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இந்த குழு, மருத்துவமனைகள் தரப்பில் விசாரணை மேற்கொண்டு, எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா எனவும் விசாரிக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *