ஆஸ்திரேலியா மீது அமெரிக்கா வருத்தம்
நியூயார்க், ஜூன் 27–
விக்கி லீக்ஸ் அதிபர் ஊடகவியலாளர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஆஸ்திரேலியா வரவேற்பு அளித்தது குறித்து
அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜூலியன் அசாஞ்சே. இவர் 2006ம் ஆண்டு விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். எப்போதும் பயணத்திலேயே இருக்கும் ஜூலியன் அசாஞ்சே, பல நாடுகளில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் ஈராக், ஆப்கானிஸ்தான் போர் குறித்த அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை தனது விக்கிலீக்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டார். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ள ஜூலியன் அசாஞ்சே 2010ம் ஆண்டு சுவீடன் நீதிமன்றத்தால் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டார்.
அமெரிக்காவின் கோரிக்கை
2012 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகம் இவருக்கு ஆதரவளித்ததையடுத்து அங்கு குடியேறிய இவரை, 2019 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசு கைது செய்தது. இதையடுத்து அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று நேற்று ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து ஆஸ்திரேலியா திரும்பிய அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி மேத்யூ மில்லர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது:–
“15 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இந்த உலகம் மறந்து விட்டது என்று நினைக்கிறேன். அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்ட போது, எங்களுடன் நேரடித் தொடர்பில் இருந்த ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த பல அதிகாரிகள் உலகின் முன் வெளிப்பட்டதால் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவை தலையிட வைத்தது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.