செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை

விக்கிரவாண்டி, ஜூலை11-

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 82.48 சதவீதம் வாக்குகள் பதிவானது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வை சேர்ந்த சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. ஆண்களும், பெண்களும் வாக்குச்சாவடிக்கு ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

அதேபோன்று மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களித்தனர். அவ்வாறு வாக்களிக்காதவர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து ஓட்டு்ப்போட்டனர். அவர்களின் வசதிக்காக வாக்குச்சாவடி மையங்களில் சாய்தள வசதி மற்றும் சக்கர நாற்காலி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற வடக்கு மண்டல போலீஸ் ஐ ஜி நரேந்திரன்நாயர் மேற்பார்வையில் 200 பேர் கொண்ட துணை ராணுவப்படையினர் மற்றும் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவை பொறுத்தவரை காலை முதல் மதியம் வரை விறுவிறுப்பாக நடந்தது. மதியம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால், வாக்குப்பதிவில் சுணக்கம் ஏற்பட்டது. வெயில் தாக்கம் குறைந்த பின்னர், மாலையில் அதிகமான மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தொடங்கினார்கள்.

ஒரு சில வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு பின்னரும் வாக்களிக்க வாக்காளர்கள் காத்திருந்தனர். இதனால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் நேரம் அவகாசம் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு முடிவடைந்தது. முடிவில் இந்த தொகுதியில் 82.48 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

பெரிய அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி, வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகளுக்கு முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாாிகளால் சீல் வைக்கப்பட்டது. பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.

அவை அங்குள்ள அறைகளில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டன. தொடர்ந்து, அந்த அறையை தேர்தல் பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல் மேற்கு வங்காளத்தில் ராய்க்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா, மணிக்தலா ஆகிய தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் பத்ரிநாத், மங்களார், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர், இமாசலபிரதேசத்தில் டேக்ரா, ஹமிபூர், நலகர் ஆகிய 12 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *