சென்னை, ஜூலை 14–
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்னியூர் சிவா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10–-ந் தேதி நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தி.மு.க.வைச் சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10 ஆயிரத்து 602 வாக்குகள் பெற்று, 3-ம் இடத்தைப் பிடித்தார்.
இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், வெற்றிச்சான்றிதழை அன்னியூர் சிவாவுக்கு வழங்கினார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்னியூர் சிவா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், ரவிக்குமார், விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் பொன் கௌதம் சிகாமணி, ப.சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.