தர்மபுரி, ஜூலை 8-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வினர் வாக்களிக்க மாட்டார்கள் என்று தர்மபுரியில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தர்மபுரிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி முதலமைச்சரின் சொந்த தொகுதியில் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். இதுபோல் தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 6 படுகொலைகள் நடந்துள்ளன.
நெல்லையில் காங்கிரஸ் தலைவர் கொலையில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. சேலத்தில் அண்ணா தி.மு.க. பிரமுகர் சண்முகம், சென்னையில் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் படுகொலைகளில் தி.மு.க. வினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டியல் சமூக மக்களின் பாதுகாவலர்கள் என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள். ஆனால் பாதிப்பு எல்லாம் பட்டியலின மக்களுக்கு தான் வருகிறது. கள்ளக்குறிச்சியில் 60-க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு பாதிப்புகள் எல்லாம் பட்டியல் இன மக்களுக்கு தான் வருகிறது. தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் தரமற்ற மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தே.மு.தி.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகளவில் போதைப்பொருள் புழக்கம் உள்ளது. தமிழக கவர்னரை நேரடியாக சந்தித்து மனு அளித்தோம். தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த முதலமைச்சர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இடைத்தேர்தலில் முறைகேடு செய்பவர்கள் மீது ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை?. எனவே தான் நாங்கள் இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தே.மு.தி.க. தொண்டர்களும் புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.