செய்திகள்

விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு: 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Makkal Kural Official

விழுப்புரம், ஜூலை9-

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அனல்பறந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இடைத்தேர்தல் போட்டியில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆளும் கட்சியான தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் இடையேதான் மும்முனை போட்டி நிலவுகிறது.

அதேவேளை தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அ.தி மு க இடைத்தேர்தலை புறக்கணித்தது. இதனால் அவர்களது வாக்கு வங்கியை பெறுவதில் பா.ம.க., நாம் தமிழர் கட்சியும் தீவிரம் காட்டின.

நாளை வாக்குப்பதிவு துவங்க உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது.

நேற்றைய இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தும்பூர், நேமூரில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். மாலையில் விக்கிரவாண்டி பேரூராட்சியில் தனது பிரச்சாரத்தை முடித்தார்.

அதேபோல் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கெடாரில் முடித்துக்கொண்டார். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரத்தூரில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

இதையடுத்து தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூரை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க அங்கிருந்து வெளியேறினார்கள்.

பிரசாரம் ஓய்ந்த நிலையில் நாளை (புதன்கிழமை) காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக வாக்குச்சாவடிகள் மும்முரமாக தயார்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் 552 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகள் 276ம், வி.வி.பேட் கருவிகள் 276ம் ஆக மொத்தம் 1,104 எண்ணிக்கையிலான எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் என 1,355 பேர் ஈடுபட இருக்கிறார்கள்.

இத்தொகுதியில் பதற்றம் நிறைந்த, மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக 44 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

மேலும் தேர்தலுக்கு இன்று ஒரு நாளே இருப்பதால் பணப்பட்டுவாடாவை முற்றிலும் தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற 2 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

பின்னர் வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி (சனிக்கிழமை) பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

விக்கிவாண்டி தொகுதிக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *