செய்திகள்

விஐடி மாணவர்களுக்கு ஹனிவெல் நிறுவனம் ரூ. 1.50 லட்சம் பரிசு

வேலூர், மார்ச். 15–

ஹனிவெல் நிறுவனம் நடத்திய மின் மற்றும் மின்னணு பொறியியலில் புதிய மென்பொருள் கண்டுபிடிப்புகளுக்கு தீர்வு காணும் வி ஹாக் 3.0 ( WEHACK 3.0) என்கிற ஹாக்கத்தான் போட்டியில் விஐடி மாணவர்கள் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்றனர். இவர்களுக்கு ரொக்க பரிசு தொகையாக ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டது.

ஹனிவெல் நிறுவனம் விண்வெளி மற்றும் தானியங்கி வாகனங்களுக்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கி தருவதில் புகழ்பெற்ற நிறுவனமாகும். மேலும் கட்டிடங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களையும் உலகளவில் உருவாக்கி தருகிறது. இந்த நிறுவனத்துக்கு தேவையான தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை பெரும் வகையில் பல்கலைக்கழகங்களுக்கிடையே புதிய தொழில்நுட்பம் உருவாக்கும் போட்டிகளை மாணவர்களுக்கு நடத்தி ரொக்க பரிசு வழங்கி வருகிறது.

அதன்படி விஐடியில் பி.டெக் பொறியியல் பயிலும் மாணவர்களை ஒரே இடத்தில் திரட்டி தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் வி ஹாக் என்கிற ஹாக்கத்தான் போட்டியை அண்மையில் ஹனிவெல் நிறுவனம் விஐடியின் மகளிர் பொறியாளர்கள அமைப்பு மின் பொறியியல் பள்ளியுடன் இணைந்து நடத்தியது.

விஐடியில் உள்ள அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் விஐடியில் பயிலும் மாணவ மாணவிகள் 95 பேர் பங்கேற்றனர். அவர்கள் 41 குழுக்களாக பிரிக்கப்பட்டு தொழில்நுட்ப தீர்வு காணும் ஆராய்ச்சயில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் பங்கேற்றவர்களுக்கு செயற்கையான அறிவுத்திறன், இயந்திரம் பற்றி அறிந்து கொள்ளுதல், உருவ செயல்பாடு மற்றும் தகவல் சுரங்கம் உள்ளிட்ட 8 தலைப்புகளில் இந்த போட்டி நடத்தப்பட்டது. விஐடி ஷேக்ஸ்பியர் அரங்கில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து 36 மணிநேரம் ஈடுபட்டு தொழில்நுட்ப தீர்வு கண்டனர்.

போட்டியினை நடத்திய நடுவர் குழுவினர் சிறந்த தீர்வுகளை தேர்வு செய்தனர். அதில் சைதன்யா கினி, யஷ்வர்தன் மாதூர், ஸ்ரீஹர்சா, மாணவர் குழுவினரின் தொழில்நுட்ப தீர்வினை முதலிடத்திற்கும் நந்த கிஷோர், அனிஷ்குமார் மற்றும் மயங் சேனாபதி குழுவினரின் தீர்வு 2ம் இடத்திற்கும் தேர்வு செய்தனர்.

அதை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஹனிவெல் நிறுவனத்தின் முதுநிலை பொறியியல் மேலாளர் கே.வெங்கடேஸ்வரா ரெட்டி பங்கேற்று முதலிடம் பெற்ற குழுவினருக்கு ஹனிவெல் நிறுவனத்தின் பரிசு தொகை ரூ.1லட்சமும் 2ம் இடம் பெற்ற குழுவிற்கு ரூ.50 ஆயிரமும் வழங்கினார். இதில் ஹனிவெல் நிறுவனத்தின் தொழில்நுட்ப முதன்மையர் நவின், விஐடி மின் பொறியியல் பள்ளி டீன் டாக்டர் ஹாக்கத்தான் நிகழ்வு அமைப்பாளர் பேராசிரியை விஜயபிரபா ஆகியோர் பங்கேற்றனர். ஹாக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *