தலையங்கம்
கடந்த 10 ஆண்டுகளாக பல வித பொருட்கள் வாங்க உதவி வரும் அமேசான் நிறுவனம், அதன் அலெக்சா குரல் உதவியாளரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான “அலெக்சா பிளஸ்” நவீனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது , இது நம்முடைய எதிர்காலத்தை மாற்றியமைக்கும் திறனை கொண்டுள்ளது.
இது ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்டு, மனிதனைப் போன்ற தொடர்புகளையும் மேம்பட்ட திறன்களையும் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடந்த அறிமுக விழாவில் ‘நான் ஒரு உதவியாளர் மட்டுமல்ல. டிஜிட்டல் உலகில் உங்கள் புதிய சிறந்த நண்பன்” என்று அலெக்சா பிளஸ் நிகழ்வின் போது அறிவித்தது!
அலெக்சா பிளஸ், நம்முடைய தேவைகளை உணர்ந்து, அவற்றைச் சிறப்பாக நிறைவேற்றும் திறன் பெற்றுள்ளது. இதன் மூலம், நம்முடைய வாழ்க்கை எளிதாகவும் வசதியாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு உதவியாளர் சந்தையில் நேரடி போட்டியாளராக அலெக்சா பிளஸை நிலைநிறுத்துகிறது. காரணம் மைக்ரோசாஃப்ட்டின் கோபைலட், கூகிளின் ஜெமினி மற்றும் ஆப்பிளின் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளுடன் சிரி-ஐ மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகள் என தீவிரமான போட்டிகளுக்கு மத்தியில் இந்த நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தல் வந்துள்ளது.
அலெக்சா மற்றும் சிரி குரல் உதவியாளர் திறனில் ஆதிக்கம் செலுத்தினாலும் நவீன சேட் ஜிபிடி போன்றவற்றின் திறனை எட்டவில்லை என்பதுதான் உண்மை.
மெட்டா, ஓபன்ஏஐ மற்றும் எலோன் மஸ்க்கின் எக்ஸ்ஏஐ போன்ற நிறுவனங்கள் முதலீட்டிற்கு உடனடி லாபகர கண் எதிரில் இல்லை என்று இருந்தபோதிலும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்கின்றன.
600 மில்லியனுக்கும் அதிகமான அலெக்சா சதனங்கள் உபயோகிப்பவர்கள் இருப்பதால் அமேசான் சற்றே இந்த பந்தயத்தில் முன்னிலைவகிக்கிறது.
தற்போது இசை இயக்குதல், வானிலை அறிவிப்புகள், ஸ்மார்ட் ஹோம் கட்டுப்பாடு போன்ற பல எளிய பணிகளுக்கு அலெக்சா அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது.
தற்போது அவர்களது அறிமுகமான அலெக்சா பிளஸ் ஒரு மெய்நிகர் நவீன முகவராக செயல்பட வசதிகள் கொண்டுள்ளது.
அறிமுக விழாவில் நடந்த செயல் விளக்கங்கள் அலெக்சா பிளஸின் மேம்பட்ட திறன்களைக் காட்டின:
பணி ஆட்டோமேஷன்: இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல், குறுஞ்செய்திகளை அனுப்புதல், பயணங்களைத் திட்டமிடுதல் மற்றும் பகிரப்பட்ட காலெண்டர்களை புதுப்பித்தல்.
தரவு பகுப்பாய்வு: ஒரு குறிப்பிட்ட பணி, அதாவது நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றது போன்ற செயல்கள் முடிந்ததா என்பதைத் தீர்மானிக்க பாதுகாப்பு கேமரா காட்சிகளை பகுப்பாய்வு செய்தல்.
ஆக்கப்பூர்வமான கதைகள்: பயனர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களுடன் கதைகளை உருவாக்குதல் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு அஞ்சலி போன்ற பாடல்களை இசையுடன் உருவாக்குதல்.
மொத்ததில் அலெக்சா பிளஸ், செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இது, வெறும் கட்டளைகளை நிறைவேற்றும் உதவியாளராக இல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக நம்பகமான காரியதரிசியாகவே செயல்படும் என்பதையே உலகம் எதிர்பார்க்கிறது.