சிறுகதை

வாழ்க்கை | கரூர்.அ.செல்வராஜ்

கூட்டுக் குடும்ப வாழ்க்கையே சிறந்தது என்ற கொள்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் மூத்த மருமகள் ஆனாள் சரண்யா.

பட்ட மேற்படிப்பு படித்திருந்தும் வேலைக்கு அனுப்பாத தனது கணவன் செல்வகுமார், மாமனார், மாமியார் ஆகியோரால் குடும்பத் தலைவி ஆனாள்.

வீட்டு வேலைகள் செய்யும் வசந்திக்கு 35 வயதிருக்கும். அவள் தனது வேலைத் திறமையாலும் பேச்சுத் திறமையாலும் அனைவரும் விரும்பும் குணங்களைப் பெற்றவளாக இருந்தாள். அவள் மீது தனது கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார் உட்பட அனைவரும் மதிப்பு, மரியாதையும் வைத்திருப்பதை சரண்யாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பொறாமையும் எரிச்சலும் அடைந்தாள்.

வீட்டு வேலைக்காரி மீது ஏதாவது ஒரு பழியைக், குற்றத்தை சுமத்தி வேலையை விட்டு நிரந்தரமாக விரட்டியடிக்கத் திட்டம் போட்டாள்.

அழுக்குத் துணிகளை துவைப்பதற்காக துணிகளைக் கேட்டு வசந்தி வருவாள் என்பதை அறிந்திருந்த சரண்யா தனது சுடிதார் பேண்ட் பாக்கெட்டில் 2 பவுன் மதிப்புள்ள ஒரு தங்கச் சங்கிலியையும் நைட்டியின் பாக்கெட்டில் இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களையும் வைத்தாள்.

சரண்யா தந்த அழுக்குத் துணிகளைத் துவைக்க வாங்கிச் சென்ற வசந்தி வழக்கம் போல எல்லாத் துணிகளையும் ஒரு உதறி உதறினாள். சட்டைப் பாக்கெட், பேண்ட் பாக்கெட், சுடிதார் பேண்ட் பாக்கெட், நைட்டி சைடு பாக்கெட் ஆகியவைகளை சோதனை செய்தாள்.

சரண்யாவின் சுடிதார் பேண்ட் பாக்கெட்டிலிருந்து தங்கச் சங்கிலியையும் நைட்டி சைடு பாக்கெட்டிலிருந்த 500 ரூபாய் நோட்டுகள் இரண்டையும் உடனே எடுத்துக் கொண்டு வசந்தி சரண்யாவிடம் வந்து பேசினாள்.

‘‘சரண்யா அம்மா! இந்தத் தங்கச் சங்கிலி உங்க சுடிதார் பேண்ட் பாக்கெட்டில் இருந்துச்சு, இந்த ஆயிரம் ரூபாய் பணம் உங்க நைட்டி சைடு பாக்கெட்டிலே இருந்துச்சு… இந்தாங்க அம்மா’’ என்ற சொல்லிக் கொடுத்தாள். அதன் பின்பு ‘‘ஏம்மா… தங்கச் சங்கிலியையும் 1000 ரூபா பணத்தையும் உங்க ஞாபக மறதியால் வச்சிட்டீங்களா? அல்லது என்னுடைய நேர்மையைச் சோதிக்கிறதுக்காக வச்சீங்களா?’’ என்று கேட்டாள் வசந்தி.

வசந்தியின் பேச்சைக் கேட்ட சரண்யா தான் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்து விட்டதே என்று மனதில் நினைத்தாள். அதை வெளியில் காட்டாமல் சமாளித்துக் கொண்டு வசந்தியிடம், ‘‘வசந்தி… எனக்கு வர வர ரொம்ப மறதி வருது. எந்தப் பொருளை எங்கே வச்சேங்கிறது ஞாபகம் வரமாட்டேங்குது. சரி அதிருக்கட்டும், தங்கச் சங்கிலியையும், பணத்தையும் கண்டுபிடிச்சுக் குடுத்ததுக்காக இந்த 1000 ரூபாயை நீயே வச்சிக்க… அதுவும் பரிசாக வைச்சிக்க’’ என்று கொடுத்தாள் சரண்யா.

பணத்தை வாங்க மறுத்த வசந்தி ‘‘சரண்யா அம்மா! நீங்க என்னுடைய நேர்மையை சோதிச்சு வேலையிலிருந்து விரட்டப் பாத்தீங்க. உழைக்கிறதுக்காக மாச சம்பளம் தர்றீங்க. அது எனக்குப் போதும். உங்க கெட்ட குணத்துக்காக இந்த வீட்டு வேலையை விட்டுப் போகமாட்டேன். உங்களை நம்பி வேலைக்குச் சேரலை. இந்த வீட்டிலே பேசுற தெய்வமா வாழ்ந்துகிட்டிருக்கிற உங்க மாமியாருக்காக வேலை செய்யறேன். அந்த அம்மாவை விட்டுத் தனிக்குடித்தனம் போகலாம்னு திட்டம் போடாதீங்கம்மா, எண்ணம் போல வாழ்வுங்கிறதை எப்பவும் மறக்காதீங்க’’ என்று சொல்லி விட்டு தனது வேலையையும் தொடர்ந்தாள் வசந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *