சிறுகதை

வாழ்க்கை என்றால் | கோவிந்தராம்

அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மாணவர்களும் மாணவிகளும் தரிசனம் செய்து விட்டு அடுத்து பார்வையிட பேரிஜம் ஏரிக்கு புறப்படத் தயாராக இருந்தனர்.

டிரைவர் வண்டியை எடுக்கலாமா என்றார்.

நடத்துனர் இன்னும் இரண்டு பேர் வரவேண்டியுள்ளது. வந்ததும் எடுக்கலாம் என்றார்.

பயண ஏற்பாட்டாளர் அந்த இருவருக்கும் போன் செய்தார். இருவர் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற பதிலையே வந்தது.

ஜார்ஜும் ஜமீலாவும் குறிஞ்சி ஆண்டவர் சன்னதியின் மலைப்பகுதியில் உள்ள மரத்தடியின் கீழே அமர்ந்திருந்தனர்.

ஜமிலா கழுத்தில் தன் தங்கச்சங்கிலியை போட்டான் ஜார்ஜ். உடனே ஜமிலா தன் விரலில் இருந்த மோதிரத்தை எடுத்து ஜார்ஜுக்கு போட்டுவிட்டாள். இருவரும் இறுக்கமாக கட்டி அணைத்து முத்தமிட்டுக் கொண்டார்கள். பின் ஒரு ஹோட்டலுக்குச் சென்று அறை எடுத்து தங்கி முதலிரவை மகிழ்ச்சியாக முடித்தார்கள்.

அந்த நேரம் அந்த ஹோட்டலுக்குள் போலீஸ் ஆய்வுக்கு வந்த போது விபச்சாரம் செய்தவர்களை பிடித்தனர். அந்த கூட்டத்தில் இருவரும் சிக்கிக்கொண்டனர். காவல் நிலையத்திற்கு சென்று விசாரனை செய்த போது இவர்கள் சொன்ன தகவல்கள் முன்னுக்குப் பின் குழப்பமாக இருந்ததால் இவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் சொல்ல, அவர்கள் இரு குடும்பாத்தாரும் காவல் நிலையத்திற்கு புறப்பட்டு வந்து விட்டனர். ஆய்வாளர் இருவரும் காதல் திருமணம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லி இருவரையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

வெளியே வந்தபின் பெற்றோர்கள் இருவரும் ஒன்றாகக் கூடி ஒரு முடிவு எடுத்தனர். அதன்படி ஜமீலாவின் பெற்றோர் தங்கள் மகளை ஜமீலாவை அவர்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் எந்த விதமான பணம், மற்றும் பொருள்கள் கொடுத்து உதவக் கூடாது என்ற நிபந்தனையை போட்டனர். இவர்கள் இவ்வளவு வைராக்கியம் எடுத்து திடமான முடிவு எடுக்க ஜார்ஜும் அவர் மனைவியும் இந்த நிபந்தனைகளை ஏற்று பிள்ளைகள் அனாதையாய் விட்டுவிட்டு வந்தபடியே கைவீசித் திரும்பிச் சென்றனர்.

நடு ரோட்டில் அனாதையாக நிற்க வேண்டிய நிலையை எண்ணி முதலில் கையிலிருந்த மோதிரத்தை விற்று அந்த பணத்தில் ஊருக்கு திரும்பினர். நண்பர்கள் வீடு தேடி உதவி கேட்டனர். இப்படியே இரண்டு நாட்கள்தான் ஓட்டமுடிந்தது. கல்லூரியிலிருந்து இருவரையும் நீக்கி விட்டதாக தகவல் வந்தது.

நண்பர்களும் இதற்குமேல் தங்களால் உதவி செய்ய முடியாது என்று கைவிட்டனர்.

என்ன ஜமீலா உங்கள் பெற்றோர் நிறைய செலவு செய்து வசதிகள் செய்வார்கள் என்று சொன்னியே அது ஏன் நடக்கவில்லை என்றான்.

அது போகட்டும் உன் பெற்றோரும் எது கேட்டாலும் செய்வார்கள் என்று தான் நீயும் சொன்னே. அது இப்ப ஏன் நடக்கவில்லை என்றாள் ஜமிலா. இவையெல்லாம் நாம் காதல் போதையில் கனவிலும் நினைத்துப் பார்த்தது இனிமேல் நாம் எப்படி வாழப்போகிறோமா அல்லது சாகப்போகிறோமா என்கிறார்கள்.

இறுதியாக அந்த தங்கச் சங்கிலியை விற்றுவிட்டு அந்த பணத்தில் வீட்டிற்கு முன் பணம் கொடுத்து சிறிய வீட்டில் இருவரும் குடியேறினர்.

ஜமீலா கருவுற்றாள் ஜார்ஜ் அதை கலைத்து விடலாம் என்று சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல டாக்டர் பெண்ணின் பெற்றோர்கள் வர வேண்டும். அத்துடன் திருமணச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று சொல்ல என்ன செய்வது என்று அறியாது திகைத்தனர்.

தற்காலிகமாக ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை கிடைக்க அந்த வேலையில் சேர்ந்தான்.சிக்கனமாக வாழ ஆரம்பித்தனர்.

நிறை மாதம் வர ஜமீலாவை பொது மருத்துவமனையில் சேர்த்து பிரசவமும் நடந்தது. இரட்டை குழந்தைகள் – ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தன.

அவசரத்திற்கு பணம் கிடைக்காததால் ஜார்ஜ் ரத்த தானம் செய்து பணம் பெற்று மனைவியையும் பிள்ளைகளையும் வீட்டிற்கு அழைத்து வந்தான். பெற்றோர்கள் இருவரும் வந்து கூட பார்க்காமல் இருந்தனர். நண்பர்களும் ஒப்புக்காக ஒரு தடவை வந்து பிள்ளைகளுக்கு சில பரிசுகள் கொடுத்து சென்றனர். குடும்பம் நடத்த வேண்டும் என்றால் குறைந்த பட்சம் எவ்வளவு பணம் தேவைப்படும் என்று இப்போது தெரிந்து கொண்டார்கள்.

முறைப்படி ஒழுங்காகப் படித்து தேர்வில் வெற்றி பெற்று பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் பெற்ற பின் திருமணம் செய்திருந்தால் தான் நிம்மதியாக இருந்திருக்கும் . மேலும் பெற்றோர்கள் ஆசியுடன் இரு குடும்பத்தார்கள் உறவினர்களுடன் முறைப்படி திருமணம் நடந்திருந்தால் சந்தோஷமாக வாழ பெற்றோர்களும் நண்பர்களும் உதவி செய்திருப்பார்கள் என்பது எல்லாம் இப்போது தான் தெரிகிறது.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்காமல் அவசரக் கல்யாணத்தை முறையில்லாமல் செய்ததால் கஷ்டத்தை அனுபவித்தே ஆக வேண்டும் நிலையில் வாழ பழகிக் கொண்டார்கள் இரு பிள்ளைகளுடன் ஜார்ஜும் ஜமீலாவும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *