சினிமா

வாழ்க்கையை புரட்டிப் போடும் ஒரு ஸ்க்ரூவால் உருவான ‘உற்றான்’

25 ஆண்டுக்கு முன் நடந்ததை படம் பிடிக்கும் இயக்குனர் ஓ.ராஜா கஜினி

’உற்றான்’ – ஒரு சின்ன ஸ்க்ரூ, ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது’ என்பதே கதை. 1994-ல் சென்னை கல்லூரி ஒன்றில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்ட காதல் கதையை, ஒரு புது முயற்சியாக வித்தியாசமான பாணியில் சொல்ல முயற்சித்து இருக்கிறேன் என்றார் இயக்குனர் ஓ.ராஜா கஜினி. சாட் சினிமாஸ்’ சார்பில் இவரே தயாரித்து, இயக்கும் படம் . பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக 18 படங்களுக்கு பணிபுரிந்த அனுபவம் பெற்ற ஒ.ராஜா கஜினி முதல் முறையாக இயக்குநராக களம் இறங்குகிறார்.

‘’சமீபகாலமாக த்ரில்லர், ஹாரர், படங்களுக்கு தற்போது தமிழ் சினிமாவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் எவர்க்ரீன் கதைகளமான கல்லூரி கதைகள் அதிகம் வரவில்லை. எந்த தலைமுறையாக இருந்தாலும், படம் பார்ப்பவர்கள் தங்களை கதையின் கதாபாத்திரங்களோடு இணைத்துப் பார்க்கத் தூண்டும் வலிமை கல்லூரி கதைகளுக்கு உண்டு. ‘உற்றான்’ அப்படியொரு ஒரு கதையம்சம் கொண்ட படம் இது என்றார்.

காதலிக்கும் பெண்ணின் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும் என்று காதலன் நினைப்பதே உண்மையான காதல் என்பதை வலியுறுத்தும் படமாக இருக்கும்’’ என்றார். இவர் விளம்பர படங்களில் நடித்த அனுபவம் பெற்றவர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிமிக்ரி ஸ்டார்களாக வரவேற்பை பெற்றிருக்கும் பிரபலமான ‘கோமலி சிஸ்டர்ஸ்’சில் ஒருவரான ஹிரோஷினி கோமலி கதாநாயகியாக அறிமுகமாகிறார். (யூடியூபில் இவரது மிமிக்ரி ஷோக்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.)

முக்கிய வில்லனாக பிரபல எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி நடிக்கிறார். மற்றொரு வில்லனாக மதுசூதனராவ் கைகோர்த்திருக்கிறார். பிரபல பத்திரிகையாளர் இரா.ரவிஷங்கர் முக்கிய கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகிறார். முக்கியமான கதாபாத்திரங்களில் ஜின்னா, கானா பாடல்களில் கலக்கும் ‘கானா’ சுதாகர், ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ புகழ் மதுமிதா, இயக்குநர் சரவணன் சக்தி, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘காதல்’ பட புகழ் சரவணன், சுலக்ஷனா ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘கும்கி’, ‘மைனா’, தடையறத் தாக்க’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஹாலிக் பிரபு இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். (இவர் பிரபல ஒளிப்பதிவாளர் சுகுமாரின் உதவியாளர்). ரகுநந்தன் இசையமைக்க, மோகன்ராஜ், அருண் பாரதி, கானா சுதாகர் மற்றும் ரோகேஷ் பாடல் எழுதியிருக்கிறார்கள். நடனத்தை எஸ்.எல். பாலாஜி, ராதிகா, சாய்பாரதி, மற்றும் ஹரீஷ் கார்த்திக் ஆகியோர் இயக்குகிறார்கள். ’ பில்லா’ ஜெகன் சண்டைக்காட்சிகளை இயக்கியிருக்கிறார். படத்தொகுப்பை எஸ்.பி. அகமது கையாள்கிறார். கலை இயக்கம் மோகன மகேந்திரன் மேற்கொள்கிறார் என்றார் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அஹமது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *