சிறுகதை

வாழைப்பழ வியாபாரி- ராஜா செல்லமுத்து

சென்னை நகரின் பிரதான சாலையில் வாழைப்பழம் வியாபாரம் செய்து கொண்டிருந்தான் வாசு .பார்ப்பதற்கு அப்படி இப்படி என்று இருப்பான்.

அவனுடைய செய்கை. அவனுடைய பேச்சு .இதுவெல்லாம் சராசரி மனிதனை விடச் சற்று குறைவாக இருக்கும் என்று அவனிடம் வாழைப்பழம் வாங்குவார்கள் பேசிக் கொள்வார்கள்.

சின்ன குழாய் ரேடியாவில் பதிவு செய்யப்பட்ட குரலை ஒலிபரப்பு கொண்டிருப்பான்.

சாலை மார்க்கமாக இருக்கும் அவன் தள்ளுவண்டிக் கடையில் காரில் செல்பவர்கள் கூட அவனிடம் வாழைப்பழம் வாங்காமல் செல்ல மாட்டார்கள்.

ரஸ்தாலி, பூவன், செவ்வாழை பாளையம் காேடை என்று விதவிதமாக வாழைப்பழங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு பதிவு செய்து ஒலிபரப்பு செய்து கொண்டிருப்பான் வாசு .

அவனிடம் ஒவ்வொரு நாளும் வாழைப்பழம் வாங்கும் வாடிக்கையாளராக மாறி இருந்தான் ராமமூர்த்தி.

ராமமூர்த்தியைப் பார்த்ததும் கேட்காமலேயே செவ்வாழைப்பழத்தை எடுத்து நிறுத்து ராமமூர்த்தியின் கையில் கொடுப்பான் வாசு

இருவருக்குமான ஒரு புரிதல் இருந்தது. வாழைப்பழம் வாங்குவது மட்டுமல்ல வாசுவின் வாழ்க்கை வரலாறு அத்தனையும் ராமமூர்த்திக்கு அத்துபடி .

வாசுவின் மனைவி குழந்தை குடும்பம் என்று அத்தனை விவரங்களும் ராமமூர்த்திக்குத் தெரியும்.

தினமும் வாழைப்பழம் வாங்கும்போது ஏதாவது ஒன்றை ராமமூர்த்தியிடம் குடும்பத்தைப் பற்றி சொல்லிக் கொண்டுதான் இருப்பான் வாசு.

வாசுவின் கிராமம் சென்னையில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் வழியில் இருக்கும் ஒரு குக்கிராமமாக இருந்தது.

அந்தக் குக்கிராமத்தில் இருந்து பிழைப்புத் தேடி வந்தவன் தான் வாசு .மனைவி குழந்தைகளுடன் இருந்தவன். தற்போது மனைவி கிராமத்தில் இருப்பதால் இவன் மட்டும் சென்னையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.

வழக்கம் போல் அன்றும் ராமமூர்த்தி வாசுவின் கடைக்கு வந்தான்.

அவன் எப்போதும் கேட்கும் குரலை விட அந்த சின்ன குழாய் ரேடியோவில் இருந்து இப்போது வித்தியாசமாக குரல் கேட்டது.

என்ன வாசு வாழைப்பழ சத்தம் கேட்காம வேறு ஏதோ கேக்குதே? என்று ராமமூர்த்தி கேட்க

அது ஒன்னும் இல்ல சார். ரகசியம் என்றான் வாசு

அது என்ன ரகசியம்? என்று ராமமூர்த்தி விடாப்பிடியாக கேட்க அந்தச் சின்ன குழாய் ரேடியாேவை எடுத்து ராமமூர்த்தியின் கையில் கொடுத்தான் வாசு.

இதைக் காதில் வச்சு கேளுங்க என்ற போது

என்ன இது? என்ற கேள்விக்குறியோடு அந்த ரேடியோவை வாங்கிய ராம மூர்த்தி தன் காதில் வைத்தான்.

பிரதான சாலை என்பதால் கார் வண்டிகளின் சத்தங்களும் மற்ற சத்தங்களும் ஒருமித்து கேட்க ,அந்த குழாய் ரேடியோவில் இருந்து வரும் சத்தத்தை அவ்வளவு சரியாக ராமமூர்த்தியால் கணிக்க முடியவில்லை.

ரொம்ப உன்னிப்பாகக் கவனித்த போது அது வாசுவின் மனைவியின் குரல் என்று தெரிந்தது. கண்களை அகல விரித்த ராமமூர்த்தி வாசுவின் மனைவி யாரோடோ பேசிக் கொண்டிருக்கும் அத்தனை குரல்களும் கேட்டுக் கொண்டிருந்தன.

வீட்டு விஷயங்களைப் பற்றி யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் வாசுவின் மனைவி.

ஒரு பெண் ,ஒரு ஆணின் குரலும் வந்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத ராமமூர்த்தி

என்ன வாசு இது ?உங்க மனைவி குரல் மாதிரி இருக்கு? என்ன இது? என்று கேட்டபோது

சார் நான் மெட்ராஸ்ல இருக்கேன்; என் பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் கிராமத்தில இருக்காங்க; அங்க என்ன நடக்குது. வீட்டில் என்ன செய்றா? அவ யாரு கூட பேசுறா ? அப்படின்கிற விஷயத்தை நான் இங்கயிருந்து கேட்டுகிட்டு இருக்க முடியும் என்றான் வாசு

என்ன சொல்றீங்க ? என்று ராமமூர்த்தி கேட்டபோது

ஆமா சார் இது பொண்டாட்டி மேல நம்பிக்கை இல்லாம இல்ல சும்மா ஒரு திருப்தி என்று வாசு சாெல்ல

இத எப்படி வச்சு கேக்குற? கேமராவ எங்க வச்ச? என்று ராமமூர்த்தி கேட்டபோது

லண்டனில் இருந்து வாங்குன கேமரா சார் அது. அதுல எல்லாம் பதிவாகும் .அங்கிருந்து பேசுற சத்தமும் கேட்கும். வீடியாேவும் பாக்க முடியும். அதனால வீட்டுக்கு யாரு வராங்க போறாங்க அப்படிங்கறத துல்லியமா இங்க இருந்து நான் கேட்க முடியும். அவ பொய் சொன்னா கூட நான் கண்டுபிடிச்சிடுவேன் என்று வாசு சொன்ன போது

இந்த கேமராவை எங்கிருந்து வாங்குன என்று ராமமூர்த்தி வாசுவிடம் அழுத்தம் திருத்தமாக கேட்டான்

லண்டன்ல இருந்து வாங்குனது என்று வாசு சொன்னபோது

அவனின் ஒன்றும் அறியாத பார்வைக்குள் இவ்வளவு பெரிய விஷயம் ஒளிந்து இருக்கிறதா ?என்று ராமமூர்த்தி வியந்து போனான்.

வாசுவை பார்த்தா எதுவும் தெரியாம இருக்குற ஆளு மாதிரி இருக்கு. இவனுக்குள்ளி எவ்வளவு பெரிய குரூர புத்தியா? என்று வியந்த ராமமூர்த்தி அவனை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

என்ன சார் இந்த உலகம் விசித்திரமானது. யாரையும் நம்ப முடியாது. கட்டுன பொண்டாட்டியா இருந்தா என்ன? பெத்த புள்ளையா இருந்தா என்ன ?நமக்கு சந்தேகம் வந்துட்டா அதை தீர்த்துக்கறதுக்கு இப்படி செய்தது தப்பில்லை சார் என்று ஒருவாராக விழித்துக் கொண்டு ராமமூர்த்தி பார்த்து பேசிக்கொண்டு இருந்தான் வாசு.

ராமமூர்த்தியால் இதை நம்பவே முடியவில்லை. எதுவும் தெரியாத அப்பிராணி போல் இருக்கும் வாசுவுக்குள் இவ்வளவு ஒரு சிந்தனையா? என்று நினைத்தவன் அவனுக்கான செவ்வாழைப் பழத்தை வாங்கி விட்டு

சரி வாசு நான் வரேன் என்று திரும்பிய போது,

இன்னொருவர் வாழைப்பழம் வேண்டும் என்று வாசுவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்

எவ்வளவு ? என்று கேட்ட வாசு வாழைப்பழத்தை நிறுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்

அந்தத் தள்ளு வண்டியில் இருந்த ஒலிபெருக்கிக் குழாய் ரேடியோவில் சன்னமாக அவனின் மனைவியின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது .வாழைப்பழம் வாங்குவதற்கு அது என்னவென்று தெரிய வாய்ப்பில்லை தான்.

ஆனால் ராமமூர்த்திக்கு அந்தக் குரல் என்னவென்று தெளிவாகத் தெரியும்.ஒரு முறைக்கு பலமுறை வாசுவைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே சென்றான்.

எதையும் யாரையும் சாதாரணமாக எடை போட்டு விடாதே அவர்களுக்குள்ளும் ஒரு குரூர மனப்பான்மை இருக்கும் என்பது ராமமூர்த்திக்கு இப்பாேது விளங்கியது.

ராமமூர்த்தி தூரம் சென்றாலும் வாசுவை திரும்பிப் பார்க்க மறக்கவில்லை.அவன் காது மடல்களில்

சார் இந்த கேமராவ நான் லண்டன்ல இருந்து வாங்கினேன் என்று அப்பிராணியாக சொன்ன வாசுவின் குரலும் அவன் முகமும் ராமமூர்த்தியின் முகத்தருகே வந்து வந்து சென்று கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *