சிறுகதை

வாழவைத்த தெய்வம்! – எம். பாலகிருஷ்ணன்

Makkal Kural Official

“ஏய். கிழவி உனக்கு வேற வேலையே இல்லையா? எப்பப் பார்த்தாலும் என்னை எதையாவது சொல்லி உயிர வாங்கிட்டே இருக்க! என்று தன்னுடைய பாட்டியைப் பார்த்து சத்தம் போட்டான் காளியப்பன்,

“டேய் உனக்கு நல்லதுக்கு தானே சொன்னேன். ஏண்டா இப்படி என்மேல கோபப்படுறே?

“நீ ஒன்னும் எனக்கு நல்லது சொல்ல வேணாம். பேசாம இரு! என்று தனது பாட்டியை அதட்டிவிட்டு வீட்டினுள் சென்றான் காளியப்பன்.

“என்னங்க உங்க பாட்டி கிட்ட சத்தம்? என்று அவன் மனைவி ஈஸ்வரி வீட்டுக்குள் வந்த தனது கணவன் காளியப்பனிடம் கேட்டாள்.

“எப்ப பார்த்தாலும் அங்க போகாதே; இங்க போகாதேன்னு சொல்லிகிட்டே இருக்கு இந்தக் கிழவி!

“தெருவுல ஒரு சண்டை நடந்திடுச்சி. நான் சும்மா வேடிக்கை பாத்து நின்னுகிட்டு தான் இருந்தேன். அதைப் போயி இந்தக்கிழவி கிட்ட ஒன்னுக்கு ரெண்டாபோட்டு கொடுத்துட்டாங்க”

நான் தான் அந்த இடத்தில சண்டை போட்டேன்னு நினைச்சி, இது என்னை சத்தம் போடுது!

“சரி. சரி. விடுங்க. அது உங்களுக்கு நல்லதுக்கு தானே சொல்லியிருக்கும்” என்றுதும் அவன் மனைவி மீது கோபப்படத் தொடங்கினான்.

“நீயும் அந்தக்கிழவியோட சேர்ந்திட்டியா? அப்போ நீயும் என்மேல சந்தேகபடுறே!

“நான் உங்கள சந்தேகப்படலீங்க சண்டை போடுற இடத்துலே நின்று வேடிக்கை பாத்தாலும் பிரச்சினையாகிடுமுன்னு தான் நானும் சொல்லுறேன்.

“அடியே! நான் ஏன் சண்டைக்கு போகபோறேன்? வேடிக்கை பார்த்தது தப்பா?

“ஆமாங்க, இப்ப உள்ள உலகத்தில எதுவும் நடக்கும். நம்ம சும்மா தான் நிப்போம் ; வேணுமுன்னே நம்ம கிட்ட வம்பு இழுப்பாங்க. கண்ணால பாத்த சாட்சியின்னு போலீஸ்காரங்க நம்மக்கிட்டே கேள்விகேட்பாங்க!

“இதுக்குத்தான் சண்டை நடக்குற இடத்தில நாமலும் நிக்கக்கூடாதுனு சொல்ல வந்தேன்”

“அடியே! எங்க பாட்டியும் நீயும் ஒன்னுதான்! பேசாம சாப்பாட போடு” என்று மனைவியிடம் பேச்சை நிறுத்தி விட்டு உட்கார்ந்தான்’ காளியப்பன்.

காளியப்பனின் பாட்டி தான் வேலாயி. அவனது அப்பாவை பெற்றவள். பெற்றோர் வெளியூரில் கிடைக்கும் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டனர்.

அவர்கள் சென்று ஒரு மாதத்திற்குமேல் ஆகிவிட்டது. அவனுக்கு திருமணம் முடிந்து ஓரு குழந்தை உள்ளது. இவன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான்.

அம்மா அப்பா வெளியூர் வேலைக்கு சென்றததிலிருந்து இவனது பாட்டி தான் இவனை கண்காணித்து வருகிறாள்.

இவன் குடியிருக்கும் தெரு பலதரப்பட்ட கூலி வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் நிறைந்த தெருவாகும். காளியப்பன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சிறிதுநேரம் பொழுதுபோக்காக வெளியில் சென்று வருவான். ஆனால் அவன் குடியிருக்கும் தெருவில் திடீரென ஒருத்தொருக்கொருத்தர் எதோ ஒரு காரணத்திற்கு சண்டைகள் போட்டுக்கொள்வார்கள். இவன் தெருவில் செல்லும் போது சண்டை சச்சரவுகள் நடந்தால் விபரீதமாக ஆகிவிடும்.

அப்போது உடனே காவல்துறையினர் வந்து சத்தம் போடும் போது தனது பேரனையும் சத்தம் போடுவார்களோ என்று அவனது பாட்டி வேலாயி வேதனைபடுவாள். அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடக்கும் தெருவல்லவா அது!

தனது பேரன் காளியப்பன் எதாவது பிரச்சினையில் சிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் அவள் அவனைக் கண்டிப்புடன் கண்காணித்து வருகிறாள்!

பேரன் யாரிடமும் எந்த பிரச்சினைக்கு போகாமலும் அவனைத் தேடிஎந்த பிரச்சினையும் வராமலும் நல்லபடியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவள்.

ஆனால் பாட்டியின் கண்டிப்பு காளியப்பனுக்கு வேம்பாகக் கசக்கும். அதனால் ‘தன்னைக் கண்டிக்கும் பாட்டியை சிலநேரங்களில் கோபத்தில் சத்தம் போடுவான்.

தெருவில் யாரிடமும் பேரனைச் சேர விடமாட்டாள்! பேரனைத் தேடி யாராவது அவன் நண்பர்களே வந்தாலும் அவர்களையும் சத்தம் போடுவாள்!

அந்த அளவிற்கு வேலாயி தன் பேரன்மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள். ஆனால், காளியப்பன் இதைத் தெரிந்திருக்க ஞாயமில்லை! தேவையில்லாமல் தம்மை கண்டிக்கின்றாள் பாட்டி என்றே நினைப்பான்.

இப்படி ஒவ்வொரு நாளும் பாட்டி அடிக்கடி கண்டிக்கிறாளே தம்மை சுதந்திரமாக இருக்க விடவதில்லையே என்று ஆதங்கப்பட்டான்!

ஒருநாள் .

வழக்கம் போல் காளியப்பன் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து தன் மனைவியிடமும் பாட்டியிடமும் சொல்லாமல் அவனது நண்பர்களை பார்க்க வேகமாக வெளியேபோகும் போது, அவனது பாட்டி “டேய்! வேலைக்கு போயிட்டு இப்ப தான்வந்தே! அதுக்குள்ள உன்னோட பிரண்ட பார்க்க போகனுமா? பேசாம வீட்ல இருடா! தெருவே கெட்டுகிடக்கு” என்று சொல்ல,

காளியப்பனின் முகம் நெருப்பாய் எரிந்தது! “ஏய். கிழவி நீ என்னை கவனிக்கிறதே உன்னோட வேலையா? பேசாமா இருக்கிறீயா இல்ல என்கிட்டஏச்சுப் பேச்சு வாங்கலாமுன்னு நினைக்கிறீயா? என்று சொல்லவும் அதற்கு அவன் பாட்டி “நாம இருக்குற தெருவில எப்ப சண்டை வருமுன்னு நமக்கே தெரியாது.

ஒரே குடிகாரப் பசங்களா இருக்காங்க. அதுனால தான் சொல்றேன் நீ வெளியே போகாதேடா! என்றாள்.

அதை நான் பாத்துக்குறேன். நீ முதல்ல உன்னை பாத்துக்கோ. வழக்கமாக அலட்சியமாக பேசினான் காளியப்பன்

“டேய். நான் சொல்றதை கேளு இல்லையின்னா உங்கப்பா வந்தவுடனே நீ என் பேச்சை கேட்கமாட்டேன்னு சொல்லிடுவேன்”!

காளியப்பனுக்கு கோபத்தில் உஷ்ணம் ஏறியது” அடியே கிழவி! நான் உன்னை ஓங்கி ஒரு அடிஅடிச்சா அதோட நீ காலி!

மானங்கெட்ட கிழவி என்றவாறே அவனது பாட்டியை தள்ளி விட அவள் அப்படியே சுவரில் மோதி மண்டை உடைந்தது!

“அம்மா! என்று கத்தியபடி கீழே விழுந்தாள்! பாட்டியின் சத்தம்கேட்டு வீட்டினுள் உள்ளேயிருந்து காளியப்பன் மனைவி ஓடிவந்தாள் !

என்னங்க ஆச்சி? பாட்டிக்கு? என்றபடி பார்க்க பாட்டியின் தலையிலிருந்து ரத்தம் வடிந்திருந்ததை பார்த்தவுடன், பெரும் அதிர்ச்சியடைந்தாள்!

“உங்க பாட்டியை என்ன செஞ்சிங்க? மண்டை உடைஞ்சி ரத்தம் ஒழுகுது” எனக் கேட்க காளியப்பன் பதில் சொல்ல முடியாமல் விழிக்க!

உடனே அவனதுபாட்டி நானேதாம்மா தெரியாம கீழே தடுமாறி விழுந்துட்டேன் என்றாள்.

அய்யோ பாட்டி! இப்படியா ஆகணும்? வாங்க முதல்ல ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றுக் கூறி,

உடனே ஓர் ஆட்டோவை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் பாட்டியை

காளியப்பன் தன்னுடைய பாட்டியை கோபத்தில் தள்ளிவிட்டு மண்டையை உடைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் எதுவும் பேசமுடியாதவனாய் நின்றான் !

அப்போது வீட்டு வாசலில் ஒருவர், “வேலாயி அம்மாள்! என்று குரல் கொடுக்க உடனே காளியப்பன்,

வெளியே சென்றுபார்க்கும் போது, ஒரு தபால்காரர் நின்று கொண்டிருந்தார்!

“என்ன விசயம்? என்று காளியப்பன் அவரிடம் கேட்க அதற்கு தபால்காரர்,”வேலாயி இருக்காங்களா? அவங்களுக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு!

“என்னோட பாட்டி தான். அவங்க இப்ப ஆஸ்பத்திரிக்குபோய் இருக்காங்க. என்ன லெட்டர்? என்று அவன் கேட்க,

“இன்ஸ்சுரன்ஸ் ஆபிஸ்ல இருந்து ஒரு தபால் வந்திருக்கு . அவங்க மாதமாதம் கட்டிட்டு வந்த பணம் முதிர்ச்சியாகி போனஸோட வந்திருக்கு!

அதை காளியப்பன் பேரனுக்கு மாத்தச்சொன்னாங்க” எனக்கு வரக்கூடிய பணத்தை என்னோட பேரனுக்கு மாத்தணுமுன்னுசொன்னாங்க.

நீங்க தான் அவங்க பேரனா? என்றுகேட்டதும் காளியப்பன் அப்படியே சிலையாகி அதிர்ச்சியில் நின்று விட்டான்!

உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் ” ஓ “வென கதறி அழ ஆரம்பித்தான் ! “அய்யோ பாட்டி! உன்னோட அருமை தெரியாமல் உன்னை அடிச்சி மண்டையை உடைச்சிட்டேனே !

நான் ஒரு பாவி! நான் ஒரு கொலைகாரன்! என்று தன்னுடைய தலையில் அடித்து புலம்பினான், காளியப்பன்!

அந்த நேரத்தில் மருத்துவ மனைக்கு போய்விட்டு காளியப்பனின் பாட்டி தலையில் கட்டுடன் நடந்துவந்தாள். கூடவே அவன் மனைவியும் வந்தாள். தபால்காரரை பார்த்ததும் அய்யா வாங்கய்யா வீட்டுக்கு என்ன தபால் எதாவது வந்திருக்கா? எனக் கேட்க அதற்கு தபால்காரர் “ஆமாம்மா வந்திருக்கு சரி என்ன தலையில கட்டோட வர்றீங்க ?

“ஆமாங்கய்யா நான் தடுமாறி கீழே விழுந்து சுவத்துல மோதிட்டேன் சின்ன காயம்” என்றாள்.

“என்னங்கம்மா உங்க பேரன் என்னமோ சொல்றாரு. நீங்க ஒன்னு சொல்றீங்க புரியலையே !

“அதை விடுங்கய்யா! தபால் வந்திருக்கா? என்றுக்கேட்க” ஆமாம்மா உங்களுக்கு பணசெக்கு வந்துருக்கு

நீங்க மாதாமாதம் கட்டுன பணத்துக்கு வட்டிபோட்டு போனஸோட‌ வந்திருக்குமா தபால் காரர் சொல்லவும்

“அதை அப்படியே என்னோட பேரன் காளியப்பன் பேர்ல் மாத்துங்க அவன் பொண்டாட்டி பிள்ளைகுட்டி காரன். அவன் வாழ்க்கை நல்லா இருக்கட்டும் நான் வாழ்ந்து முடிச்சவ ” என்றுக் கூறி முடிப்பதற்குள்,

காளியப்பன் தன்னுடைய பாட்டியின் கால்களில் விழுந்து குழந்தைபோல் தேம்பி அழுதான்!

“அய்யோ பாட்டி! நான் நல்லா இருக்குறதுக்கு நீ எனக்காக பாடுபட்டதை நான் பாவி புரிஞ்சிக்கலையே. உன்னை அலட்சியமா நினைச்சேன். ஆனா நீ எனக்காகவே வாழ்ந்திருக்க நீ எனக்கு பாட்டி இல்ல தெய்வம்’’

என்று பாட்டியின் முன்பாக கூனி குறுகி நின்றான் காளியப்பன்!

அவன் மனைவி ஈஸ்வரி ‘‘ என்னையும் மன்னிச்சிடுங்க பாட்டி என்றாள்.

பேரனையும் அவன் மனிவியையும் அன்போடு அரவணைத்துக் கொண்டாள் வேலாயி பாட்டி!

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *