சிறையில் கல்லுடைத்துக் கொண்டிருந்தபோது கைதி் மோகனிடம் பேச்சுக்கொடுத்தான் மதன்.
பேச்சுவாக்கில் மோகனின் தங்கையைக் கெடுத்து அவள் தற்கொலை செய்து கொள்ள காரணமான ஒருவனை அவன் ஆத்திரத்தில் கொலை பண்ண முயன்று அது நிறைவேறாமல் போக மோகன் சிக்கியதும் தங்கையைக் கெடுத்தவன் பணபலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் குற்றத்திலிருந்து தப்பித்ததும் தெரிய வந்தன.
‘‘மதன் நீ எப்படி சிறைக்கு வந்தாய்’’ என்றான் மோகன் .
“ நான் காசுக்குக் கொலை செய்பவன்! ஆனால் நான் கொலை செய்தவர்கள் அத்தனை பேரும் சாக வேண்டிய குரூரமான கொடியவர்கள்!” என்றான் மதன் .
“நீ காசு வாங்கிக் கொண்டு கொலை செய்ததால் நீ கூறும் தர்மம். நியாயம் எல்லாம் பொய்!”
“வஞ்சகர்களைக் கொலை செய்ய என்னிடம் கூறியவர்கள் நல்லவர்கள்! ஆனால் கோழைகள்! பணம் தந்து தங்களால் முடியாததை என்னிடம் சொல்லிச் செய்யச் சொன்னார்கள். அந்தக் காரியத்தை முடித்தது எப்படித் தவறாகும்?” என்று கேட்டான் மதன்.
“ஓர் உயிரைக் கொல்ல நீ யாரு? அதுவும் காசு வாங்கிக் கொலை செய்துவிட்டு அவன் வாழத் தகுதி அற்றவன் என்பது அபத்தம்!” என்றான் மோகன்.
“என்னைப் பொறுத்தவரை எல்லா மனித உயிர்களும் ஒரே மதிப்புடையவை அல்ல! பைசா பெறாத மனித உயிர்களும் நம்மிடையே நடமாடுவதுடன் அவை நமக்கு பெரும் கொடுமைகள் செய்து நாம் அழிய காரணமாய் இருக்கின்றன! அதனால் நீ, நான் கொலை செய்து அதற்குக் கூலி பெறுவதைக் குற்றம் என்றும் என்னைக் கொலைகாரன் என்றும் சொல்கிறாய். அதை நான் ஏற்க முடியாது!”
“ஓர் உயிருக்கு விலை நிர்ணயம் செய்யும் நீ அப்பட்டமான கொலைகாரன்! மேலும் உனக்குச் சம்பந்தமில்லாதவர்களைக் கொலை பண்ணியிருக்கிறாய்!”
“அப்ப மற்றவர்களுக்குக் கொடுமை அல்லது தீங்கிழைப்பவர்களை நாம் கண்டும் காணாமல் இருக்க வேண்டும்! உன்னைப் போல் நேரடியாகப் பாதிக்கப் பட்டவர்கள் மட்டும் பழிக்குப் பழி, கொலை எல்லாம் செய்யலாமா?”
சற்று நேரம் பதில் பேச முடியாமல் தடுமாறிய மோகன்,
“தவறு என்பதால்தான் நீ சிறைக்கு வந்திருக்கிறாய்… நானும் வந்திருக்கிறேன்!”
“ஆனால் நான் இன்னும் இரண்டே மாதங்களில் விடுதலையாகிவிடுவேன். நீ நல்லவன் சாமர்த்தியமின்றி மாட்டிக் கொண்டாய். மேலும் நீ தப்பவிட்டவனை இனி உன்னால் ஒன்றும் செய்யமுடியாது! அவன் குளிர் விட்டுப்போய் மீண்டும் மீண்டும் கொடுமைகள் செய்வான்!’ என்று பெரிதாகச் சிரித்தான் மதன்.
சொன்னதுபோல் விடுதலையானான் மதன்.
ஆனால் மறுவாரமே மீண்டும் ஒரு கொலைக் குற்றத்திற்காகச் சிறையிலடைக்கப்பட்டான் மதன்.
“இப்ப யாரைக் கொலை செய்தாய்?” என்று குத்தலாகக் கேட்ட மோகனிடம்
“உன் தங்கையைக் கெடுத்து அவள் தற்கொலைக்குக் காரணமான அவனை! அதை நான் காசுக்காக செய்யவில்லை! அவன் வாழத் தகுதியற்றவன்!” என்றான் மதன்.
இப்போது மதன் மீது என்ன குற்றம் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினான் மோகன்.