செய்திகள்

வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழப்பு

Makkal Kural Official

கோவை, பிப். 5–

வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழந்தார்.

கோவை மாவட்டத்தில் வால்பாறை முக்கிய கோடை வாசஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வால்பாறைக்கு செல்லும் முக்கிய சாலையான வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் வாட்டர்பால்ஸ் அருகே எஸ்டேட் டைகர் வேலி பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்றது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தினர்.

இதற்கிடையில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி மைக்கேல் (வயது 70) பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வால்பாறை நோக்கி வந்தார். வாட்டர் பால்ஸ் அருகே வந்ததும், சாலையில் யானை நிற்பதை பார்த்தும் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து சென்றார். அப்போது சாலையில் நின்ற யானை மோட்டார் சைக்கிளுடன் அவரை தூக்கி வீசியது. தொடர்ந்து அவரை தூக்கி வீசிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து மயங்கினார்.

யானை சென்றதும், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். யானை நிற்பதை தெரிந்தும் மோட்டார் சைக்கிளில் யானைக்கு அருகில் சென்ற ஜெர்மனி நாட்டு சுற்றுலா பயணி யானை தாக்கி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *