செய்திகள்

வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை: தொழிலாளர் நலன் புதிய கொள்கையில் மத்திய அரசு அறிவிப்பு

பணியில் இருந்து விடுபடும் ஊழியர்களுக்கு 2 நாட்களுக்குள் பணப் பலன்கள்

புதுடெல்லி, ஜூலை 1–

தொழிலாளர் நலன் தொடர்பான புதிய கொள்கைபடி, பணியில் இருந்து விடுபடும் ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர பணப் பலன்களை 2 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதிய தொழிலாளர் நலன் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த புதிய தொழிலாளர் நலன் கொள்கையில் எண்ணற்ற மாற்றங்கள் இடம் பெற உள்ளன. குறிப்பாக ஊழியர்களின் ஊதியம், அவர்கள் பிஎப் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பு, பணி நேரம் போன்றவற்றில் மாற்றம் நடைபெற உள்ளது. ஊழியர்களின் பணி சூழல், தொழிலாளர் நலன்,ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட உள்ளன.

இந்த சட்டங்கள் அமலுக்கு வரும் பட்சத்தில், நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதிகள் அமலுக்கு வந்த உடன் தொழிலாளர்களுக்கு 5 நாட்களுக்கு பதிலாக 4 வேலை நாட்கள் என்ற முறையை நிறுவனங்கள் அமல்படுத்த முடியும். அதாவது 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆனால் வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் தினமும் 8 மணி நேரம் பணிக்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு அனைத்து பிடித்தமும் போக கைக்கு கிடைக்கும் ஊதியம் மற்றும் பிஎப் திட்டத்திற்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பு போன்றவற்றிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

நிகர ஊதியத்தில் 50% அளவிற்கான அடிப்படை ஊதியம் இருக்க வேண்டும் என்று புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பிஎப் திட்டத்திற்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு தொகை உயரும். இதனால் ஊழியர்களுக்கு கைகளில் கிடைக்கும் ஊதியம் குறைய வாய்ப்பு உள்ளது. அதே சமயம் ஒய்வுபெறும் போது கிடைக்கும் பிஎப் தொகை மிக அதிகமாக இருக்கும். ஊழியர்கள் விலகினால் அல்லது வெளியேற்றப்பட்டால் கடைசி தினத்தில் இருந்து 2 நாட்களில் அவருக்கு கொடுக்க வேண்டிய ஊதியம், இதர பலன்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.