செய்திகள்

வாரணாசி ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

அலகாபாத், ஆக. 3–

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வைத் தொடர அலகாபாத் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.

உத்தரபிரதேச வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் அருகே மிகப் பழமையான ஞானவாபி மசூதி உள்ளது. இங்கு இந்து கடவுள் சிலைகள் இருப்பதாக கூறிய இந்து அமைப்பினர் அங்கு வழிபாடு நடத்த அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, ‛வீடியோ’ பதிவு செய்து ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வின் போது, மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, இங்கு தொல்லியல் துறையினர் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்த இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், ‛மசூதிக்குள் இருக்கும் நீரூற்றை தான் சிவலிங்கம் என்று கூறுகின்றனர். எனவே, அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு அனுமதி அளிக்கக்கூடாது ‘ என, மசூதி நிர்வாக கமிட்டி தரப்பு வாதிட்டது.

இதை ஏற்க மறுத்த வாரணாசி நீதிமன்றம், தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த 24–ந்தேதி இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் தொல்லியல் துறை ஆய்வு நடத்த 26–ந்தேதி மாலை வரை தடை விதித்ததுடன், அலகாபாத் ஐகோர்ட்டை நாடும்படி மசூதி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு ஜூலை 27–ந்விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், இன்று இறுதி தீர்ப்பு வழங்குவதாக கூறியிருந்தது.

அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், முஸ்லிம் பிரதிநிதிகள் தரப்பில் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டால் அது கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று வைக்கப்பட்ட வாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதியை நிலைநாட்ட அறிவியல் பூர்வ ஆய்வு தேவைப்படுகிறது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்து தொல்லியல் துறை ஆய்வைத் தொடர அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து இந்துப் பெண்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மசூதியில் ஆய்வானது தொல்லியல் ஆய்வுத் துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதங்களின் அடிப்படையில் நடைபெறும்” என்றார்.இது குறித்து மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறும்போது, “அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன். தொல்லியல் துறை ஆய்வுக்குப் பின்னர் உண்மை தெரியவரும். அதன் மூலம் ஞானவாபி பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்” என்றார்.

முஸ்லிம் தலைவர் காலீத் ரஷீத் பிராங்கி மஹாளி கூறுகையில், எங்கள் சார்பில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடும் வாய்ப்பு உள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *