போஸ்டர் செய்தி

வாரணாசியில் மோடி மீண்டும் போட்டி: 184 தொகுதிகளுக்கு பாரதீய ஜனதா பட்டியல் வெளியீடு

புதுடெல்லி, மார்ச்.22-

184 தொகுதிகளுக்கான பாரதீய ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும், ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியிலும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி 91 தொகுதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு 25-ந்தேதி கடைசி நாள் ஆகும்.இந்நிலையில், பாரதீய ஜனதா வேட்பாளர் தேர்வுக்காக அமைக்கப்பட்ட பாரதீய ஜனதா மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் 3-வது சுற்றாக நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு பாரதீய ஜனதா வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. 184 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாரதீய ஜனதா மூத்த தலைவருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

இந்த முதல் பட்டியலிலேயே பிரதமர் மோடி பெயர் இடம்பெற்றுள்ளது. அவர் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

கடந்த முறை, மூத்த தலைவர் அத்வானி போட்டியிட்ட காந்திநகர் (குஜராத்) தொகுதியில், இந்த முறை பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா நிறுத்தப்பட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ (உத்தரபிரதேசம்) தொகுதியிலும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி நாக்பூர் (மராட்டியம்) தொகுதியிலும், வி.கே.சிங் காசியாபாத் (உ.பி.), மகேஷ் சர்மா நொய்டா (உ.பி.) தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

மத்திய அமைச்சர்கள் கிரன் ரிஜிஜு, அருணாசல் மேற்கு தொகுதியிலும், ஜிதேந்திர சிங், உத்தம்பூர் (காஷ்மீர்) தொகுதியிலும், வி.கே.சிங், காசியாபாத் (உத்தரபிரதேசம்) தொகுதியிலும், பாபுலால் சுப்ரியோ, அசன்சோல் (மேற்கு வங்காளம்) தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

கடந்த தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் தோல்வி அடைந்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இந்த தேர்தலிலும் மீண்டும் அமேதியில் போட்டியிடுகிறார். நடிகை ஹேமமாலினிக்கு மதுரா தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா மகன்

மேற்கு வங்காள மாநில பாரதீய ஜனதா தலைவர் திலீப் கோஷ், மெடினிபூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஜெய்ப்பூர் தொகுதியிலும், மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே உத்தர கன்னடா தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பெங்களூரு வடக்கு தொகுதியிலும், எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா சிமோகா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கன்னன்தானம் கேரள மாநிலம் எர்ணாகுளம் தொகுதியிலும், மிசோரம் முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் திருவனந்தபுரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

பீகார் மாநிலத்தில் பாரதீய ஜனதா போட்டியிடும் 17 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த பட்டியல், பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து, அங்கு அப்பட்டியல் கூட்டாக அறிவிக்கப்படும் என்று ஜே.பி.நட்டா கூறினார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு, குஜராத், சத்தீஷ்கார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், அருணாசலபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கான பா.ஜனதா வேட்பாளர்கள், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் வழக்கமாக போட்டியிட்டு வெற்றி பெறும் காந்திநகர் தொகுதி (குஜராத்) அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *