நல்வாழ்வு சிந்தனை
வாசனை நிறைந்த பழங்களைக் கொண்டிருப்பதால், ’மணத்தக்காளி’ என்ற பெயரை மணத்தக்காளிக்குச் சூட்டியிருக்கிறார்கள்.
சிறுசிறு மணிகள் போல பழங்கள் உருண்டிருப்பதால் மணித்தக்காளி என்றும் மிளகளவில் பழங்கள் இருப்பதால் மிளகுத்தக்காளி என்றும் பெயர் உருவாகி இருக்கிறது.
இவை தவிர்த்து உலகமாதா, விடைக்கந்தம், வாயசம், காகமாசீ என பல வட்டாரப் பெயர்கள் மணத்தக்காளிக்கு உண்டு!
வெப்பம் காரணமாக எவ்வித நோய்களும் நம் உடலுக்கு ஏற்படாமல் மணத்தக்காளி பாதுகாப்பு அளிக்கும். தனது குளிர்ச்சித் தன்மையால் வெப்ப நோய்களைத் தடுக்கும்.கிராமங்களில் வளர்ந்த சிறுவர்கள் மணத்தக்காளியின் பழங்களை சாப்பிட்டிருப்பார்கள். மணத்தக்காளியின் பழங்களை முகத்தில் பூசி விளையாடுவதும், அப்படியே சாப்பிடுவதும் சிறுவர் சிறுமிகளின் உடல் வெப்பத்தை அவர்களுக்கே தெரியாமல் குறைக்கும்.
வாய்ப்புண் இருக்கிறதா? மணத்தக்காளி இலையைப் பிழிந்து சாறு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க, வாய்ப்புண் மறையும். இதை வாய்க் கொப்பளிக்கும் நீராகவும் வாய்ப்புண் இருப்பவர்கள் பயன்படுத்தலாம்.
வயிற்றிலும் குடற்பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும் திறன் மணத்தக்காளியிடம் உண்டு. வாய்ப்புண் ஏற்பட்டதுமே கிராமங்களில் தேடப்படும் முதல் மூலிகை மணத்தக்காளி தான். இதன் கீரை மற்றும் பழங்கள் இரண்டுக்கும் வயிற்றுப் புண்களை குணமாக்கும் சக்தி இருக்கிறது.