கண்ணூர், ஜூன் 13–
கேரளாவில் வாய்பேச முடியாத சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் முழப்பிலங்ஙாடு பகுதியை சேர்ந்தவர் நௌஷாத் மற்றும் நுசீபா தம்பதி. நௌஷாத் பஹ்ரைனில் பணியாற்றி வரும் நிலையில், அவரின் மனைவி நுசீபா மற்றும் அவரது 10 வயது மகன் நிஹால் ஆகியோர் கேரளாவில் வசித்து வந்துள்ளனர். சிறிதளவு மனம் குன்றியும், வாய்பேச முடியாத நிலையிலும் இருந்த சிறுவன் நிஹால், நேற்று மாலை வீட்டில் இருந்து விளையாடுவதற்காக வெளியே வந்துள்ளார்.
வழக்கமாக சிறிது நேரம் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் நிஹால், நேற்று வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் நுசீபா மகனை தேடியுள்ளார். ஆனால் வழக்கமாக சிறுவன் விளையாடும் இடத்தில் இல்லை. இதனால் பதறிப்போன அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நிஹாலை தேடிச்சென்றுள்ளனர். இந்நிலையில் நிஹாலின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் தெரு நாய்கள் கூட்டமாக வருவதை அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பார்த்துள்ளார்.
கடித்து குதறிய தெருநாய்கள்
இதனை அடுத்து நாய்கள் வந்த திசையை நோக்கி சென்ற அந்த நபர் யாரும் இல்லாத வீடு ஒன்று இருப்பதை கண்டு அங்கு சென்று பார்த்துள்ளார். அங்கு சிறுவன் நிஹால் நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனை அடுத்து, உள்ளூர் வாசிகள் மற்றும் நிஹாலின் உறவினர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் உடல் முழுவதும் நாய்கள் கடித்து குதறியதில் நிஹால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைகேட்டு தாய்கதறி துடித்த சம்பவம் அங்கு உள்ளவர்களிட்டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இன்று மதியம் நிஹாலின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.